
கோவை: உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் கோவை காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இது குறித்து பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் பட்டியலிட்ட உலகின் முதல் இரண்டு சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலில், கோவை காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 4 பேராசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியர் ஜான் அயோனிடைஸ் தலைமையிலான நிபுணர்கள் குழு, ஸ்கோப்பஸ் ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஹை இன்டெக்ஸ், விரும்பித் தேடப்படும் ஆராய்ச்சியாளர், பல்வேறு நிபுணத்துவங்களை ஆதாரமாகக் கொண்ட தரவுகளின் அடிப்படையில் இந்தப் பட்டியலைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் பல்கலைக்கழகத்தின் சிவில் என்ஜினீயரிங் துறை பேராசிரியர் சினேகா கெüதம், எலக்ட்ரிக்கல் துறை பேராசிரியர் இம்மானுவேல் செல்வகுமார், எலக்ட்ரானிக்ஸ் துறை பேராசிரியர் ஜூட் ஹேமந்த், மெக்கானிக்கல் துறை பேராசிரியர் காட்சன் ஆசீர்வாதம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுக்குப் பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன், துணைவேந்தர் மன்னர் ஜவஹர், பதிவாளர் எலைஜா பிளசிங், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.