முல்லைப் பெரியாறு அணை உரிமையை மீட்க திமுக அரசு தயக்கம்: அண்ணாமலை

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மீட்பதற்கு அரசியல் உள் நோக்கத்திற்காக திமுக அரசு தயங்குகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேனியில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
முல்லைப் பெரியாறு அணை உரிமையை மீட்க திமுக அரசு தயக்கம்: அண்ணாமலை


முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மீட்பதற்கு அரசியல் உள் நோக்கத்திற்காக திமுக அரசு தயங்குகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேனியில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மீட்க வலியுறுத்தியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு மாறாக அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது: 

"ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக் தலைமையில், தமிழக விவசாயிகளுக்காக, தமிழர்களால் கட்டப்பட்டது முல்லைப் பெரியாறு அணை. அணை நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 152 அடியாக இருந்த போது, அணை நீர் மூலம் 2.41 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது. பின்னர், அணை நீர்மட்டம் 136 அடியாகக் குறைக்கப்பட்ட போது, பாசன பரப்பு 71 ஆயிரம் ஏக்கராக குறைந்தது.

முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்திய பின்பு, அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் அளித்த பரிந்துரையின்படி உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதில், தமிழகம் மற்றும் கேரள மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நீதிமன்ற தீர்ப்பின்படி, கடந்த 2014, 2015 மற்றும் 2018-ம் ஆண்டில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி, தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்பட்டது. அப்போது அணை நீர் மூலம் 1.80 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது.

தற்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு மாறாகவும், தமிழக அரசுக்கு முறையாக தகவல் அளிக்காமலும் அணை நீர்மட்டம் 138.70 அடியாக இருந்த போதே, அணையிலிருந்து கேரளப் பகுதியில் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

ஆனால், முல்லைப் பெரியாறு அணை அருகே உள்ள பேபி அணையை பலப்படுத்துவதற்கு, கேரள வனப் பகுதியில் உள்ள மரங்களை வெட்ட அனுமதி அளித்ததாக தமிழக முதல்வர், கேரள முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறார். இதற்கு, மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளிக்கவில்லை என்று கேரள அரசு மறுக்கிறது.

வரும் 2024-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் துணை பிரதமராக வேண்டும் என்ற கனவிலும், அதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவும், குறிப்பாக கேரளத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர்களின் ஆதரவும் வேண்டும் என்ற அரசியல் உள் நோக்கத்திற்காகவும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை நிலைநாட்டுவதற்கு திமுக அரசு தயக்கம் காட்டுகிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு மாறாகவும், தமிழக உரிமையை பறிக்கும் வகையிலும் அணையிலிருந்து கேரளப் பகுதியில் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு தமிழக, கேரள முதல்வர்கள் பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். அணை நீர்மட்டத்தை 142 அடியாக நிலை நிறுத்தவும், 152 அடியாக உயர்த்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனை வலியுறுத்தி பாஜக சார்பில் விவசாயிகளை ஒருங்கிணைத்து முல்லைப் பெரியாறு அணையை நோக்கி உரிமை மீட்பு போராட்டம் நடைபெறும்" என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com