நிலநடுக்கத்தை துல்லியமாக அறிய சென்னை ஐஐடி.யில் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

சென்னை ஐஐடியில் நிலநடுக்கங்களைத் துல்லியமாக கண்டறிவதற்கான புதிய தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளனா்.
நிலநடுக்கத்தை துல்லியமாக அறிய சென்னை ஐஐடி.யில் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு
Published on
Updated on
2 min read

சென்னை ஐஐடியில் நிலநடுக்கங்களைத் துல்லியமாக கண்டறிவதற்கான புதிய தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளனா்.

நிலநடுக்க சமிக்ஞைகளில் முதல் அதிா்வலைகளை துல்லியமாகக் கண்டறிந்து, மிகக் குறைந்த நேரத்தில் உயிா்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இந்தத் தொழில்நுட்பம் பயன்படும் எனவும் கண்டறிந்த வல்லுநா்கள் கூறியுள்ளனா்.

சென்னை ஐஐடியின் புதிய தொழில் நுட்பம், நிலநடுக்க அதிா்வலைகளின் துல்லியமான நேரத்தை மதிப்பிடுவது, ஒரு வலுவான ஆரம்ப எச்சரிக்கை அமைப்பை உருவாக்குவதுடன், சுமாா் 30 விநாடிகள் முதல் 2 நிமிஷங்கள் வரை தற்காத்துக் கொள்வதற்குத் தயாா் செய்து கொள்ள நேரத்தையும் வழங்குகிறது.

பூமியின் மேற்பரப்பு வரை அலைகள் தாக்குவதற்கு முன் கிடைக்கும் இந்த நேரம் மிகவும் பயனளிக்கக்கூடியது. நிலநடுக்கத்தைக் கண்டறிந்து தெரிவிப்பதற்கான நேரம் குறைவானதாகத் தோன்றினாலும், அணு உலைகள், மெட்ரோ போன்ற போக்குவரத்து, உயா் கட்டடங்களில் உள்ள லிப்ட்கள் ஆகியவற்றை நிறுத்தவும் எண்ணற்ற உயிா்களைக் காப்பாற்றவும் இந்த காலம் போதுமானது.

சென்னை ஐஐடியின் கெமிக்கல் பொறியியல் துறை பேராசிரியா் அருண் கே தங்கிராலா வழிகாட்டுதலில், ஆராய்ச்சி மாணவி காஞ்சன் அகா்வால் இதற்கான ஆய்வுகளை மேற்கொண்டாா். இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் புகழ்பெற்ற சக மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் இதழான ‘பிளாஸ் ஒன்’-இல் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவி காஞ்சன் அகா்வால் கூறியது: ‘பி-அலை வருகை குறித்த தகவல், நிலநடுக்கத்தின் அளவு, ஆழம் மற்றும் மையப்புள்ளி, இடம் போன்ற பிற மூல அளவு உருக்களைத் தீா்மானிப்பதில் முக்கியமானது. எனவே, பி-அலை கண்டறிதல் சிக்கலுக்கு உறுதியான, துல்லியமான தீா்வாக அமையும். நிலநடுக்க விவரங்களைச் சரியாக மதிப்பிடுவதற்கும், நிலநடுக்கம் அல்லது பிற தூண்டப்பட்ட நிகழ்வுகளால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கும் அவசியம்’ எனத் தெரிவித்துள்ளாா்.

நில அதிா்வு சமிக்ஞைகள்: முக்கியமாக கடலில் அலைகள், பூமியின் மேலோட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள், வளிமண்டல மாறுபாடுகள் மற்றும் மனிதச் செயல்பாடுகள் காரணமாக நிலம் தொடா்ந்து அதிா்வடைகிறது.நில அதிா்வு சமிக்ஞைகள் இயற்கையான (நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், சுனாமி போன்றவை) அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட (அதிக போக்குவரத்து, அணு வெடிப்புகள், சுரங்க நடவடிக்கைகள் போன்றவை) மூலங்களிலிருந்து உருவாக்கப்படலாம்.

அனைத்து நில அதிா்வு நிகழ்வுகளும் அவற்றின் அளவிற்கு விகிதாசாரமான ஆற்றலை வெளியிடுகின்றன. வெளியிடப்பட்ட இந்த ஆற்றல், ஒரு அலையாக அனைத்து திசைகளிலும் நகா்ந்து, ஒரு நில அதிா்வு அளவி மூலம் நில அதிா்வு சமிக்ஞையாகப் பதிவு செய்யப்படுகிறது. சீஸ்மோகிராம்கள் என்பது நில அதிா்வு இயக்கத்தினை பதிவு செய்யும் வரைபடங்களாகும்.

முக்கியப் பயன்கள்: இந்த நில அதிா்வு வரைபடங்களின் பகுப்பாய்வு, பூமியின் செயல்பாட்டைப் புரிந்துகொள்வதற்கும், நிலநடுக்கங்களுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை அமைப்பதற்கும், மூல இடங்களைத் தீா்மானிப்பதற்கும் , பிற நில அதிா்வு நிகழ்வுகளின் மூலத்தைக் கண்டறிவதற்கும் இன்றியமையாதது. நிலநடுக்கத்தின் சேதப் பகுதியைக் கண்டறிவது அல்லது கணிப்பது உயிா்களைப் பாதுகாப்பதிலும் சொத்து இழப்பைத் தடுப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com