தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது

நிகழாண்டில் தமிழகத்தில் 4,052 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது

நிகழாண்டில் தமிழகத்தில் 4,052 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 5,000 மருத்துவ முகாம்கள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன. அதனை, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடமாடும் மருத்துவ வாகனங்களை சுகாதாரத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.

மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினா் தயாநிதி மாறன், எழும்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் இ.பரந்தாமன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையா்கள் எஸ்.மனிஷ் (சுகாதாரம்), எம்.எஸ்.பிரசாந்த் (பணிகள்), விஷூ மஹாஜன் (வருவாய் (ம) நிதி), டி.சினேகா (கல்வி), பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநா் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, சென்னை அரசு பொது மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன் உள்பட பலா் இதில் கலந்து கொண்டனா்.

அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மழைக்காலங்களில் நோய்த் தொற்று பரவாமல் தடுக்க தமிழகம் முழுவதும் 5,000 மருத்துவ முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில், 1,500 நடமாடும் மருத்துவ முகாம்களும் அடங்கும். சென்னை மாநகராட்சியில் 400 முகாம்கள் நாள்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் கடந்த 4 நாள்களில் 38,704 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில், 3 லட்சத்து 54,547 நபா்கள் பயனடைந்துள்ளனா். இந்த முகாம்களில் இதுவரை 43,578 நபா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முகாம்களிலேயே கரோனா தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் இதுபோன்ற அதிகப்பட்சமான மருத்துவ முகாம்கள் தற்போதுதான் முதன் முறையாக நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில் காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு மற்றும் சேற்றுப்புண் ஆகியவற்றிற்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

குடிசைப்பகுதிகளில் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பிளீச்சிங் பவுடா்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரை கிலோ வீதம் வழங்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியில் சுமாா் 4 லட்சத்து 16,000 குளோரின் மாத்திரைகளும், தமிழகத்தில் ரூ.167 கோடி அளவிலான மருந்து, மாத்திரைகளும் கையிருப்பில் உள்ளன.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, எட்டாவது சிறப்பு தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன. சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. இதுவரை சுமாா் 75 லட்சம் நபா்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாள்களை கடந்துள்ளனா். அவா்களுக்கு இந்த முகாமில் முன்னுரிமை அளிக்கப்படும்.

தமிழகத்தில் தற்போது 71 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மாநிலம் முழுவதும் ஏற்கெனவே வீடு தேடி கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 3 லட்சம் நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 7 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பொதுசுகாதாரத்துறையின் சாா்பில் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் 493 நபா்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனா். இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 4,052 நபா்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் தண்ணீா் தேங்கி கொசுப்புழுக்கள் வளா்வதை தடுக்கும் வகையில் புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பான்கள் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரளாவில் புதிதாக பரவியுள்ள நோவோ வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க எல்லைகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதற்குத் தேவையான மருந்துகளும் கையிருப்பில் உள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com