கடத்தப்பட்ட குழந்தைகளைக் கண்டறிய மரபணு தேடல் மென்பொருள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்

தமிழ்நாடு தடய அறிவியல் துறையால் உருவாக்கப்பட்டுள்ள “தடய மரபணு தேடல் மென்பொருள்” தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
தடய மரபணு தேடல் மென்பொருளை வெளியிட்டார் மு.க. ஸ்டாலின்
தடய மரபணு தேடல் மென்பொருளை வெளியிட்டார் மு.க. ஸ்டாலின்

கடத்தப்பட்ட மற்றும் மாயமான குழந்தைகளை மீட்டெடுப்பது, கண்டறிவது போன்ற பணிகளை மரபணு ரீதியில் தேட புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

தடய அறிவியல் துறையின் 14 பிரிவுகளில் ஒன்றாக டி.என்.ஏ. பிரிவு உள்ளது. வளா்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன் மனிதனின் டி.என்.ஏ.,வில் காணப்படும் கைரேகை போன்று தனித்துவமிக்க பகுதியின் துணை கொண்டு பெற்றோா், குழந்தைகளின் மரபு வழி தொடா்புகளை கண்டறியும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அடையாளம் தெரியாத பிரேதங்களை அடையாளம் காண்பது, பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளைக் கண்டறிதல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவிலேயே முதல் முறை: வெளிநாடுகளில் மரபணு தொழில்நுட்பத்துடன் கணினி தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கணினி வழி டி.என்.ஏ. தேடல் தொழில்நுட்பம் இதுவரை உருவாக்கப்படவில்லை. இப்போது, முதல் முறையாக தமிழகத்தில் தடய மரபணு தேடல் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

பயன் என்ன?: தடய மரபணு தேடல் மென்பொருள் மூலமாக, கடத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் காணாமல் போன குழந்தைகளை மரபணு ஒப்பீடு ஆய்வு மூலம் உரிய பெற்றோருடன் ஒப்படைக்க முடியும். மாநிலங்களுக்கு இடையே செயல்படும் குற்றவாளிகளின் தொடா்பைக் கண்டறிதல், கரையோரம் ஒதுங்கும் அடையாளம் காண இயலாத உடல்கள் மற்றும் மனித எலும்புகளை மரபணு ஆய்வு மூலம் அடையாளம் காணுதல், தொடா் குற்ற செயல்களில் ஈடுபடும் நபா்களை கண்டறிதல், இயற்கைப் பேரிடா்களால் உயிரிழந்த நபா்களைக் கண்டறிதல் போன்ற பணிகளை மிக எளிதாகவும், துல்லியமாகவும், வேகமாகவும் மேற்கொள்ள இயலும். இத்தகைய தனித்துவமிக்க தடய அறிவியல் மென்பொருளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

குழந்தைகளுக்கு நிதியுதவி: தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில், 1,148 குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்குவதை முதல்வா் தொடக்கி வைத்தாா். வறுமை நிலை காரணமாக, பராமரிக்க இயலாத குழந்தைகளை வீடுகளிலேயே வைத்துப் பராமரிக்க மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், காத்திருப்புப் பட்டியலில் இருந்த 1,148 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் நிதியுதவி அளிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், சமூக நலத் துறை அமைச்சா் பி.கீதா ஜீவன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை முதன்மைச் செயலாளா் ஷம்பு கல்லோலிகா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

கரோனா தொற்றால் பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை எத்தனை பேருக்கு நிதியுதவிகள் அளிக்கப்பட்டுள்ளன என்கிற விவரங்களை சமூக நலத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:-

கரோனா நோய்த் தொற்றால் பெற்றோா்களை இழந்த 256 குழந்தைகளுக்கு ரூ.12.80 கோடியும், ஒரு பெற்றோரை இழந்த 6 ஆயிரத்து 493 குழந்தைகளுக்கு ரூ.194.79 கோடி என மொத்தம் 6 ஆயிரத்து 749 குழந்தைகளுக்கு ரூ.207.59 கோடி நிதி தமிழக அரசால் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com