9 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தாண்டில் 2வது முறையாக நிரம்புகிறது கரியக்கோயில் அணை

கரியக்கோயில் அணை‌, 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு  இரண்டாவது முறையாக நிரம்புகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தாண்டில்  இரண்டாவது முறையாக நிரம்புகிறது கரியக்கோயில் அணை:  விவசாயிகள் மகிழ்ச்சி
இந்தாண்டில் இரண்டாவது முறையாக நிரம்புகிறது கரியக்கோயில் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

வாழப்பாடி: சேலம் மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணை‌, 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு  இரண்டாவது முறையாக நிரம்புகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன்மலை அடிவாரம், பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், கரியக்கோயில் ஆற்றின் குறுக்கே, 52.49 அடி உயரத்தில்,190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.

இந்த அணையால், பாப்பநாயக்கன்பட்டி, ஏழுப்புளி, பீமன்பாளையம், தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில், 3,600 ஏக்கர்  விளைநிலங்கள் ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன. 

ஏ. குமாரபாளையம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் ஏறக்குறைய 2000 ஏக்கர் விளைநிலங்கள் நேரடி ஆறு மற்றும் ஏரிப்பாசனம் பெறுகின்றன.

அணை பயன்பாட்டிற்கு வந்த 1993ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் அக்கோபர் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும் பருவமழையை அணையில் தேக்கி வைத்து, ஆயக்கட்டு வாய்க்கால் பாசன விவசாயிகள் மற்றும் நேரடி ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகள் பயிரிடுவதற்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

சுற்றுப்புற கிராமங்களுக்கு முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வந்த இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழையில்லாததால், கடந்த 9 ஆண்டுகளாக இந்த அணை முழுக் கொள்ளவையும் எட்டவில்லை. கடந்த 2012 ஜனவரி 15 ந்தேதிதான் அணை இறுதியாக நிரம்பியது.

9 ஆண்டுகளுக்குப் பின் இந்தாண்டு ஜனவரி 15ந்தேதி  51.34 அடியைத் தொட்டது.  அணையில் மொத்த கொள்ளளவான  190 மில்லியன் கன அடியில், 182 மி.கன அடியை எட்டியது. இதனையடுத்து அணையில் இருந்து உபரி நீர் கரியக்கோயில் ஆற்றில் திறக்கப்பட்டது. 

அணையில் இருந்து தண்ணீர் சுழற்சி முறையில் பாசனத்துக்கு திறக்கப்பட்டதால் மீண்டும் அணையின் நீர்மட்டம் கோடைக்காலத்தில் அடியோடு குறைந்து போனது.

இந்நிலையில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த பருவ மழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி  48 அடியாக உயர்ந்து, அணையில் 158  மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது.

இன்று இரவுக்குள் அணையின் நீர்மட்டம் 51 அடியை தாண்டும் என்பதால், அணையின் பாதுகாப்புக் கருதி, அணையிலிருந்து கரியக்கோயில் ஆற்றில்  நாளை முதல்  உபரிநீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் கரியக்கோயில் ஆறு மற்றும் வசிஷ்டநதி கரையோர கிராமங்களுக்கு, வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை வாயிலாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு ஒரே ஆண்டில் கரியக்கோயில் அணை இரண்டாவது முறையாக நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  கரியக்கோயில் ஆற்றுப்படுகையில் உள்ள கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி‌, ஏத்தாப்பூர் அபிநவம், புத்திரகவுண்டன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் பனையேரி உள்ளிட்ட ஏரிகளும், குளங்களும் ஏற்கனவே நிரம்பி தண்ணீர் வழிந்தோடி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com