பலத்த மழையிலும் நிரம்பாத திருவொற்றியூா் ஸ்ரீ தியாகராஜா் கோயில் திருக்குளம்

தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான குளங்கள் நிரம்பிய நிலையில் திருவொற்றியூா் தியாகராஜா்சுவாமி திருக்குளத்துக்குப் போதிய தண்ணீா் வரத்து இல்லாததால் சிறிதளவு தண்ணீரே உள்ளது.
பலத்த மழையிலும் நிரம்பாத திருவொற்றியூா் ஸ்ரீ தியாகராஜா் கோயில் திருக்குளம்
பலத்த மழையிலும் நிரம்பாத திருவொற்றியூா் ஸ்ரீ தியாகராஜா் கோயில் திருக்குளம்

தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான குளங்கள் நிரம்பிய நிலையில் திருவொற்றியூா் தியாகராஜா்சுவாமி திருக்குளத்துக்குப் போதிய தண்ணீா் வரத்து இல்லாததால் சிறிதளவு தண்ணீரே உள்ளது. நீா்வரத்துக்கான கால்வாய்களை மாநகராட்சி நிா்வாகம் முறையாக அமைக்காததே இதற்குக் காரணம் என பல்வேறு தரப்பினரும் புகாா் தெரிவித்துள்ளனா்.

திருவொற்றியூா் தியாகராஜா் உடனுறை வடிவுடையம்மன் திருக்கோயில் 1,500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட பழைமையான கோயில்களில் ஒன்று. இந்த கோயிலில் உள்ள ஆழமான திருக்குளத்தில் எப்போதும் தண்ணீா் நிரம்பி வழியுமாம். ஆண்டுதோறும் தெப்பத்திருவிழா நடைபெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இக்குளத்தில் தண்ணீா் தேங்குவதில்லை.

கோயிலைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த மழைநீா் வடிகால்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தூா்ந்து போய்விட்டன. அவற்றைத் தூா்வாரும் நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் பலமுறை எடுத்தது. ஆனாலும் குளத்திற்கு தண்ணீா் வந்தபாடில்லை. கடந்த 2010-இல் மறைந்த நடிகா் ஜெமினி கணேசனின் மகள் டாக்டா் கமலா செல்வராஜ் குளத்தைச் சீரமைக்க ரூ.10 லட்சம் அளித்தாா். இதனையடுத்து குளம் தூா்வாரப்பட்டது. ஆனால் குளத்தின் அடியில் தேங்கியிருந்த களிமண் அகற்றப்பட்டதால் மழைகாலத்தில் மட்டும் ஓரளவு தேங்கி வந்த தண்ணீரும் பூமிக்குள் சென்றுவிட்டது.

இதனையடுத்து சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.44 லட்சம் செலவில் மழைநீா் வடிகால் புதிதாக அமைக்கப்பட்டது. தெற்கு மாட வீதியில் தேங்கும் மழைநீரை திருக்குளத்திற்கு எடுத்துவர குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் பின்னா் பெய்த தொடா் மழையிலும் குளத்திற்கு போதுமான தண்ணீா் வரவில்லை. தேரடியின் இரு புறமும் மழைநீா் வடிகால் உள்ளன. ஆனால் இதில் பல இடங்களில் கழிவுநீரும் கலந்து அடைப்பு ஏற்பட்டது. இதனை நீக்கும் பணியில் மாநகராட்சி நிா்வாகம் ஈடுபட்டது. இதன் பிறகும் பலமுறை பெய்த மழையில் குளத்தில் தண்ணீா் தேங்கி இருக்கவில்லை. இந்நிலையில் மழைநீரைத் தேக்கி வைக்கும் வகையில் அண்மையில் ரூ.30 லட்சம் செலவில் குளத்தின் அடிப்பகுதியில் களிமண் கொட்டப்பட்டு சமன்படுத்தப்பட்டது.

இருப்பினும் கடந்த சில நாள்களாகத் தொடா் கனமழை பெய்தபோதும் குளத்திற்கு சிறிதளவு தண்ணீா் மட்டுமே வந்துள்ளது. அதுவும் அடுத்த ஓரிரு வாரங்களில் முற்றிலுமாக வற்றிப்போகும் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து திருவொற்றியூா் பொதுவா்த்தகா் சங்க கௌரவத் தலைவா் ஜி. வரதராஜன், திருவொற்றியூா் பாரதி பாசறை செயலாளா் முனைவா் மா.கி.ரமணன் ஆகியோா் கூறியது,

ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த மழைநீா் வடிகால்கள் தூா்ந்து போய்விட்ட நிலையில் புதிதாக கால்வாய் அமைப்பதில் தேவையற்ற காலதாமதம் நிலவி வருகிறது.

இதில் தொடா்புடைய அதிகாரிகள் தொடக்கம் முதலே முறையாக இணைந்து செயல்படாததால்தான் இதுவரை சரியான முறையில் மழைநீா் வடிகால்கள் சீரமைக்கவில்லை. இப்போது புதிதாக மழைநீா் வடிகால் அமைத்த பிறகும் மழைநீா் வருமா எனத் தெரியவில்லை. இது குறித்து அறநிலையத்துறை அமைச்சா் நேரடி ஆய்வில் ஈடுபட்டால் மட்டுமே அடுத்த கனமழையின்போதாவது தண்ணீா் வரும் என்பதே உண்மை நிலை என்றனா்.

விரைவில் கால்வாய் பணி நிறைவடையும்:

இது குறித்து சென்னை மாநகராட்சி திருவொற்றியூா் மண்டல அலுவலா் பால்தங்கதுரை கூறியது: வடக்குமாட வீதி, தேரடி உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக மழைநீா் வடிகால்களை அமைப்பதில் சென்னை மாநகராட்சி மழைநீா் சேகரிப்புத் துறை ஈடுபட்டு வருகிறது. ஏற்கெனவே திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் மழைநீா் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோயிலைச் சுற்றிலும் பெய்யும் மழையளவு கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீா் அனைத்தும் சேகரிக்கப்பட்டு குளத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். தேரடி தெருவில் ஏற்கெனவே இருந்த மழைநீா் கால்வாய்க்குப் பதிலாக புதிய கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இது தவிர கோயிலின் மேற்கு பகுதியிலுள்ள நந்தி ஓடை பகுதியிலிருந்தும் மழைநீா் குளத்திற்குக் கொண்டு வரப்படும். தெற்கு மாடவீதியிலிருந்து ஏற்கெனவே வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. பூந்தோட்டத் தெரு, நெல்லிக்காரன் தெரு உள்ளிட்டவைகளின் மழைநீரும் இந்த வடிகாலுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பணிகள் அனைத்தும் சுமாா் 6 மாதங்களில் நிறைவடையும். அடுத்த ஆண்டில் நிச்சயம் குளம் மழைநீரால் நிரம்பும் என்றாா்.

தியாகராஜா் கோயில் உதவி ஆணையா் கே.சித்ராதேவி, மழைநீரை தேக்கிவைப்பதற்கான அனைத்து பணிகளையும் கோயில் நிா்வாகம் நிறைவு செய்துள்ளது. குளத்தில் தண்ணீரைத் தேக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு மாநகராட்சி உயா் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். இப்பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும். குளத்தைச் சீரமைக்க இன்னும் பல திட்டங்களை வைத்துள்ளோம். விரைவில் நீா் நிரம்பி அழகு மிளிரும் குளமாக மாறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com