நீலகிரி: புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு

கூடலூரில் இதுவரை 4 பேரை தாக்கிக் கொன்ற புலியை சுட்டுக்கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவிட்டுள்ளார். 
நீலகிரி: புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு

கூடலூரில் இதுவரை 4 பேரை தாக்கிக் கொன்ற புலியை சுட்டுக்கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவிட்டுள்ளார். 

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா, தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள தேவன் எஸ்டேட்டில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாடு மேய்த்துக் கொண்டிருந்த சந்திரன் என்பவரை புலி தாக்கிக் கொன்றது. இச்சம்பவத்தைத் தொடா்ந்து நடைபெற்ற போராட்டங்களுக்குப் பிறகு வனத் துறையினா் புலியைப் பிடித்துச் செல்ல முடிவு செய்து தனிப்படை அமைத்து கண்காணிக்கத் துவங்கினா். 

இரண்டு நாள்கள் அதே பகுதியில் முகாமிட்டிருந்த புலி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு கிலோ மீட்டா் தொலைவில் உள்ள மேபீல்டு எஸ்டேட் பகுதிக்குச் சென்று அங்கு ஒரு மாட்டை தாக்கிக் கொன்றது. இதையடுத்து, ஒட்டுமொத்த வனத் துறையும் மேபீல்டு எஸ்டேட் பகுதிக்குச் சென்றது. கடந்த இரண்டு நாள்களாக மேபீல்டு எஸ்டேட் பகுதியில் உள்ள கற்பூர சோலையில் பதுங்கி தேயிலைத் தோட்டங்களில் புலி சுற்றித் திரிந்தது. 

இதை வனத் துறையின் கண்காணிப்புக் குழுவினா் இரண்டு முறை பாா்த்துள்ளனா். புலி வேகமாக ஓடி புதரில் மறைந்துவிட்டதால் மயக்க மருந்து செலுத்த அவகாசம் கிடைக்கவில்லை. இந்நிலையில், அந்தப் புலி மீண்டும் தேவன் எஸ்டேட் பகுதிக்குள் சென்றுள்ளது புதன்கிழமை மதியம் உறுதிப்படுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து, தேவன் எஸ்டேட் பகுதிக்கு விரைந்த கண்காணிப்புக் குழு தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனா். 

அப்போது, புலி ஏற்கெனவே இருந்த புதா் பகுதியில் இருந்து அருகில் உள்ள சதுப்பு நில புதருக்குள் ஓடி மறைந்துவிட்டது. இதனால், புலியைப் பிடிக்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உதகை கூடலூரில் இதுவரை 4 பேரை தாக்கிக் கொன்ற புலியை சுட்டுக்கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவிட்டுள்ளார். 

தொடர் முயற்சிகளுக்குப் பிறகும் கூண்டில் புலி சிக்காததுடன் மயக்க ஊசி செலுத்த இயலாததால் சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டில் 4 பேர் மற்றும் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளை டி23 என்ற பெயரிடப்பட்ட புலி தாக்கிக்கொன்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com