முதல்வர் வருகையால் புதுப்பொலிவு பெற்ற வாழப்பாடி அரசு மாதிரிப்பள்ளி: பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழப்பாடி வருகையால் பராமரிப்பின்றி கிடந்த வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி புதுப்பொலிவு பெற்றது.
புதிய தார்சாலை வசதியுடன் புதுப்பொலிவு பெற்ற பள்ளி வளாகம்.
புதிய தார்சாலை வசதியுடன் புதுப்பொலிவு பெற்ற பள்ளி வளாகம்.


வாழப்பாடி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழப்பாடி வருகையால் பராமரிப்பின்றி கிடந்த வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி புதுப்பொலிவு பெற்றது. இதனால் மகிழ்ச்சியடைந்த பெற்றோர், ஆசிரியர் மற்றும்  மாணவர்கள் முதல்வருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள பழமையான அரசுப்பள்ளிகளில் வாழப்பாடியில் இயங்கி வரும் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் ஒன்றாகும். 1921 இல் ஆங்கிலயே அரசால் தொடங்கப்பட்ட ஆரம்பப்பள்ளியில் இருந்து, 1956 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி உயர்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டு தனியாக பிரிக்கப்பட்டது. இருபாலர் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியென பரிணாமம் பெற்று, 1978 ஆம் ஆண்டு ஜூலை 1 இல் இருந்து கடந்த 43 ஆண்டுகளாக மேல்நிலைப்பள்ளியாக இயங்கி வருகிறது. 

வண்ணம் தீட்டி புதுப்பிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை.

65 ஆண்டுகள் பழமையான இப்பள்ளியில், வகுப்பறை கட்டடங்கள், அறிவியல் ஆய்வகங்கள், கலையரங்கம், கூட்டரங்கம், ஆசிரியர் ஓய்வறை, நுாலகம், பொருள் பாதுகாப்பு அறை, விசாலமான விளையாட்டுத்திடல்  உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருப்பதால் மாவட்ட அளவில் சிறந்த சூழல் பள்ளிகளின் முதன்மையாக திகழ்ந்து வந்தது. 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்ற இப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. பள்ளி வளாகமும்,  போதிய பராமரிப்பின்றி பொலிவிழந்து காணப்பட்டது. 

இந்நிலையில், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 450 மாணவர்கள் மட்டுமே படித்து வந்த இப்பள்ளியை, அரசு மாதிரிப்பள்ளியாக தமிழக அரசு தரம் உயர்த்தியது. 

இதனையடுத்து,  எல்.கே.ஜி முதல் 6 ஆம் வகுப்பு வரை ஆண்,பெண் இருபாலர் சேர்க்கைக்கும் அனுமதி வழங்கப்பட்டதால், இப்பள்ளியின் மாணவ–மாணவியர் எண்ணிக்கை 780 ஆக உயர்ந்தது. 

கட்டி முடிக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் கலையரங்கம். 

ஆனால், குண்டு குழியுமான வளாகப் பாதை, வண்ணம் தீட்டப்படாத வகுப்பறைகள், சீரமைக்கப்படாத கழிவறைகள், விளையாட்டுத்திடல், நிறைவு பெறாத கலையரங்க கட்டுமானப்பணியென, பள்ளி வளாகம் பொலிவின்றி காணப்பட்டது. 

இந்நிலையில் , தமிழக அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் திட்டத்தை தொடங்கி வைக்க  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், செப் 29 ஆம் தேதி வாழப்பாடிக்கு வருவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.  இதனையடுத்து, இப்பள்ளி வளாகம் முழுவதும் வண்ணம் தீட்டப்பட்டது. 

வண்ண மையமான பள்ளியின் நுழைவு வாயில் அழகியத்தோற்றம்.

கடலுார் சாலையில் இருந்து திருவள்ளுவர் சிலை வரை ஏறக்குறைய 120 மீட்டர் நீளத்திற்கு தார்சாலை அமைக்கப்பட்டது. திருவள்ளுவர் சிலையும் வண்ணம் தீட்டி புதுப்பிக்கப்பட்டது. பழுதடைந்து கிடந்த கூடைப்பந்து கோபுரம், கழிவறைகள் சீரமைக்கப்பட்டது. புதர்மண்டி கிடந்த பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டதோடு, வெளிப்புறத்தில் இருந்த சாலையோர கடைகளுக்கும் அகற்றப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு பிறகு  பள்ளி புதுப்பொலிவு பெற்றது. 

இதனால், மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்கள், பெற்றோர்களும் மகிழ்ச்சியடைந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் ஆகியோருக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.சி.சக்கரவர்த்தி, நகர திமுக செயலாளர் பி.சி.செல்வம், அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கு.கலைஞர் புகழ் மற்றும் நிர்வாகிகள் கூறியதாவது:

வாழப்பாடிக்கு தமிழக முதல்வர் வருகை தந்ததால், பள்ளி வளாகம் முழுவதும் வண்ணம் தீட்டப்பட்டு புத்தொளி பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனையாக இருந்து தார்சாலை, கலையரங்கம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டது. கலையரங்கத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டது. வாழப்பாடி மாதிரிப்பள்ளிக்கு வருகை தந்து பள்ளி புதுப்பொலிவு பெறச் செய்த தமிழக முதல்வருக்கும், மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கும், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com