நவ.1 பள்ளிகள் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை: அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருச்சி: தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் இயங்கவில்லை. தொற்றுப் பரவல் குறையத் தொடங்கியதை அடுத்து மருத்துவ வல்லுநர்களின் கருத்தைக் கேட்டு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நவ.1 ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

நவ.1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதல்வரும் தெரிவித்துள்ளார். நவ.4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால், தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு பள்ளிகளை திறக்கலாம் என பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்த சூழலில், நவ.1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, திருச்சியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அமைச்சர் கூறியது:

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நவ.1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் ஏற்கெனவே அறிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரது கருத்துக்களை கேட்டு, ஆலோசனைகளையும் பெற்று முதல்வருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன.

பள்ளிகள் திறப்பது குறித்து பலரும் கருத்து தெரிவித்திருந்தாலும், மருத்துவ வல்லுநர்களின் கருத்தைக் கேட்ட பிறகே முடிவு செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். 

இதன்படி, பொது சுகாதாரத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள், மருத்துவ வல்லுநர்கள் ஆகியோரது கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே, நவ.1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளார். 

எனவே, நவ.1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com