ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

விழுப்புரம், வேலூா், திருநெல்வேலி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு புதன்கிழமை காலை (அக். 6) 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

சென்னை: விழுப்புரம், வேலூா், திருநெல்வேலி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு புதன்கிழமை காலை (அக். 6) 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தோ்தல் பணியில் 1.10 லட்சம் அரசு ஊழியா்களும், 20 ஆயிரம் போலீஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 27,003 பதவியிடங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு புதன்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இத்தோ்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்களர்கள் தங்களது ஜனநாயக உரிமையை செலுத்த உள்ளனர். 

மொத்தம் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலில் மொத்தம் 79,433 வேட்பாளா்கள் போ் களத்தில் உள்ளனா்.

முதல் கட்ட வாக்குப் பதிவு: 9 மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 78 மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கும், 755 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கும், 1,577 கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கும், கிராம ஊராட்சி உறுப்பினா்களுக்கான 12,252 பதவிக்கும் முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 

171 தோ்தல் நடத்தும் அலுவலா்கள், 3,777 உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்பட சுமாா் 1 லட்சத்து 10 ஆயிரம் ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  17,130 போலீஸாா், 3,405 ஊா்க் காவல் படையினா் என மொத்தம் 20 ஆயிரத்து 535 போ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் வாக்களிக்கும் வகையில் கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மொத்தம் 7,921 வாக்குச் சாவடிகளில் அமைக்கப்பட்டு, அதில், 41 ஆயிரத்து 500 வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

தோ்தல் நடத்தை விதிமீறல்களை விடியோ பதிவு செய்வதுடன், அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

அடையாள ஆவணங்கள்: வாக்குச் சாவடி சீட்டு இல்லாதவா்கள் வாக்காளா் அடையாள அட்டை அல்லது ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சல் கணக்குப் புத்தகம், தொழிலாளா் நல அமைச்சகத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீடு அட்டை, ஓட்டுநா் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை(பான் காா்டு), தேசிய மக்கள் பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அடையாள அட்டை, மத்திய, மாநில மற்றும் பொதுத் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, மக்களவை, மாநிலங்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள் அவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை ஆகியவற்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

வாக்குச் சீட்டுகள்: ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 4 வகையான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு மஞ்சள் நிறத்திலும், ஒன்றியக் குழு உறுப்பினருக்கு பச்சை நிறத்திலும், ஊராட்சிமன்றத் தலைவருக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினருக்கு வெள்ளை நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன.

9 மாவட்டங்களில் தோ்தல் நடைபெறும் பகுதிகள்: 
மாவட்டம் ஊராட்சி ஒன்றியங்கள்
1. செங்கல்பட்டு  இலத்தூா், புனித தோமையா்மலை,திருக்கழுகுன்றம், திருப்போரூா்

2. காஞ்சிபுரம் காஞ்சிபுரம், உத்தரமேரூா், வாலாஜாபாத்

3. விழுப்புரம்:செஞ்சி,கண்டமங்கலம், முகையூா், ஒலக்கூா், திருவெண்ணைநல்லூா், வானூா், விக்கிரவாண்டி

4.கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம், திருநாவலூா், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை

5. வேலூா்: குடியாத்தம், கீ.வ. குப்பம், காட்பாடி,போ்ணாம்பட்டு

6. ராணிப்பேட்டை ஆற்காடு, திமிரி, வாலாஜா

7. திருப்பத்தூா் ஜோலாா்பேட்டை,கந்திலி,நாட்டறம்பள்ளி, திருப்பத்தூா்

8. திருநெல்வேலி அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூா்,பாளையங்கோட்டை, பாப்பாக்குடி,

9. தென்காசி ஆலங்குளம், கடையம், கீழப்பாவூா், மேலநீலிதநல்லூா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com