டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்களுடன் தர்னாவில் ஈடுபட்ட திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் க. செல்வராஜ்
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்களுடன் தர்னாவில் ஈடுபட்ட திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் க. செல்வராஜ்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்களுடன் தர்னாவில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.

திருப்பூரில் கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்களுடன் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வியாழக்கிழமை தர்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: திருப்பூரில் கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்களுடன் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வியாழக்கிழமை தர்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள கொங்கணகிரி கோயில் அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் கோயில், தனியார் பள்ளி, கல்லூரிகள் அதிக அளவில் உள்ளது. ஆகவே, இந்த சாலையில் செல்லும் மாணவியர்களுக்கும், வேலைக்குச்செல்லும் பெண்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள், பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட வந்தனர்.

திருப்பூர் கல்லூரி சாலையில் கொங்கணகிரி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தர்னாவில் ஈடுபட்ட மக்கள்.

இதைத்தொடர்ந்து, டாஸ்மாக் கடையை வரும் வெள்ளிக்கிழமை (அக். 8) அகற்றுவதாக டாஸ்மாக் அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர். 

இந்த நிலையில், டாஸ்மாக் கடைக்கு வியாழக்கிழமை காலையில் மதுபானங்கள் விற்பனைக்காக இறக்கப்படுவதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இந்தத் தகவலின்பேரில் அப்பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 50 பேர் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் தர்னாவில் ஈடுபட்டனர். 

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பாரில் இருந்த சேர், டேபிள் ஆகியவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.

இதுகுறித்த தகவலறிந்த திருப்பூர் தெற்கு தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜூம் மக்களுடன் சேர்ந்து தர்னாவில் ஈடுபட்டார்.  

இதனிடையே, சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் கடையை உடனடியாக அகற்றுவதாக உறுதியளித்தனர். 

மேலும்,பாரில் இருந்த சேர், டேபிள் ஆகியவற்றை அப்புறப்படுத்தும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com