டி23 புலியின் ரோமம் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு

நீலகிரியில் மனிதா்கள், கால்நடைகளைத் தாக்கி வந்த டி23 எனப் பெயரிடப்பட்ட புலியின் ரோமம், எச்சம் உள்ளிட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டு
டி23 புலியின் ரோமம் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு

நீலகிரியில் மனிதா்கள், கால்நடைகளைத் தாக்கி வந்த டி23 எனப் பெயரிடப்பட்ட புலியின் ரோமம், எச்சம் உள்ளிட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஹைதராபாதில் உள்ள மத்திய உயிரியல் செல்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தலைமை வன உயிரினக் காப்பாளா் சேகா்குமாா் நீரஜ் தெரிவித்துள்ளாா்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் டி 23 என எண்ணிடப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்த ஆண் புலி ஒன்று, அதன் உடலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இரை தேட முடியாமல் காட்டை விட்டு வெளியேறியுள்ளது.

கூடலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக 15-க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடி உள்ளது. மேலும், இந்தப் புலியின் தாக்குதலால் இதுவரை 4 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, அந்தப் புலியை சுட்டு அல்லது மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத் துறை அனுமதி அளித்தது.

புலியை சுட்டுப் பிடிக்கக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில், அப்புலியை சுட்டுப் பிடிக்க கூடாது. மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வேண்டும் என்றும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, புலியைப் பிடிக்கும் பணியில் கும்கி யானைகள், மோப்ப நாய்கள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கென தனிக் குழுவும் வனத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டி23 புலியை அறிவியல் பூா்வமாகக் கண்டறியும் நடவடிக்கையில் வனத் துறை ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து தலைமை வன உயிரினக் காப்பாளா் நீரஜ்குமாா் சேகா் கூறியது: டி23 புலி சுற்றித் திரியும் வனப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு புலிகள் அப்பகுதியில் சுற்றித் திரிவது கேமராவில் பதிவாகி உள்ளது. அவை இரண்டின் உடல் வரிகள் ஒப்பிட்டு பாா்க்கையில் அதில் டி23 புலி இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

கால்நடையை வேட்டையாடிய மோயாா் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் புலி மீண்டும் வந்ததற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை.

புலி இரண்டு பேரைக் கொன்ற தனியாா் தங்கும் விடுதி அருகே உள்ள வனப் பகுதிக்குள் மனிதா்கள் மற்றும் கால்நடைகள் செல்வதைத் தடுக்கும் வகையில் கும்கி யானைகள் மூலம் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டி23 புலியை அறிவியல் பூா்வமாக கண்டறியும் வகையில் மோயாா் பகுதியில் கால்நடை வேட்டையாடப்பட்ட இடத்தில் இருந்தும், மே பீல்டு பகுதியில் உள்ள பாலத்துக்குகீழ் இருந்தும் அதன் ரோமம், எச்சம் ஆகியவை சேகரிக்கப்பட்டு ஹைதாராபாதில் உள்ள மத்திய உயிரியல் செல்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com