
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் 6.10.2021 மற்றும் 9.10.2021 ஆகிய நாள்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண மற்றும் தற்செயல் தேர்தல் நடைமுறைகள் இன்றுடன் முடிவடைவதால் தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் இன்று காலை 10 மணிக்கு முடிவுக்கு வருகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- பில் கிளிண்டன் நலமாக உள்ளார்; விரைவில் வீடு திரும்புவார்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 1,381 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், 2,901 ஊராட்சித் தலைவர், 22,581 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என மொத்தம் 27,003 பதவியிடங்களுக்கு அக்டோபர் 6, 9-இல் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
28 மாவட்டங்களில் காலியாக இருந்த 13 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 40 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், 106 ஊராட்சித் தலைவர், 630 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என மொத்தம் 789 பதவியிடங்களுக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 9-இல் தேர்தல் நடைபெற்றது. 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.