பி.எஸ்.டி. கட்டுமான நிறுவன உரிமையாளர் தென்னரசு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

பி.எஸ்.டி. கட்டுமான நிறுவன உரிமையாளர் தென்னரசு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

பிரபல கட்டுமான நிறுவனமான பி.எஸ்.டி. நிறுவனத்தின் உரிமையாளர் தென்னரசு வீடு, அலுவலகங்களில்  லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 


நாமக்கல்: நாமக்கல்லில் அதிமுக ஆட்சியில் அரசு கட்டடங்களை கட்டும் பணியில் ஈடுபட்டு வந்த பிரபல கட்டுமான நிறுவனமான பிஎஸ்டி நிறுவனத்தின் உரிமையாளர் தென்னரசு வீடு, அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னை புளியந்தோப்பில், அதிமுக ஆட்சியில் ரூ. 251 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில், சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததை அடுத்து பி.எஸ்.டி நிறுவனம் சர்ச்சையில் சிக்கியது. 

புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை கட்டிய பி.எஸ்.டி கட்டுமான நிறுவனம் கட்டிவரும் பல இடங்களிலும் தரமற்ற முறையில் கட்டுமானப் பணி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் முறைகேடுகளால் தரமற்ற முறையில் கட்டடம் கட்டியதால் பொதுமக்கள் குடியேறுவதற்கு முன்னதாகவே கட்டடம் சேதமடைந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதேபோல 2020 இல் ரூ.385 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணி, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கட்டடம் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தரமற்ற முறையில் கட்டுமான பணி நடைபெற்றதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. 

நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தும் பி.எஸ்.டி. கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் வீடு.

தமிழகம் முழுவதும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சேலத்தில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீடு உள்பட 27 இடங்களில் வெள்ளிக்கிழமை சோதனையானது நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், இளங்கோவன் ஆதரவாளர்  பி.எஸ்.டி. நிறுவனத்தின் உரிமையாளர் தென்னரசு வீடு, அலுவலகங்களில்  லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிக்க | விஜயபாஸ்கர் தொடர்புடைய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை

பரமத்தி ஒன்றியத்திற்கு உள்பட்ட கோலம் கிராமத்தில் உள்ள வீடு, நாமக்கல் நல்லிபாளையத்தில் உள்ள பி.எஸ்.டி நிறுவன தலைமை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த பணியில் பத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். 

நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தும் பி.எஸ்.டி. கட்டுமான நிறுவன அலுவலகம்.

பி.எஸ்.டி. நிறுவன உரிமையாளர் தென்னரசு,  கடந்த 10 ஆண்டுகளாக, தமிழகத்தின் பல இடங்களில் ரூ.1,000 கோடிக்கு மேல், அரசு ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com