தமிழகத்தின் தியாக தீபங்கள் - 74: கே.பி.சுந்தராம்பாள்

தனது குரல் வளத்தாலும் பாட்டுத்திறத்தாலும் தமிழக இளைஞர்களைத் தட்டியெழுப்பிய கே.பி.சுந்தராம்பாள் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 26.10.1908- இல் பிறந்தவர்.
தமிழகத்தின் தியாக தீபங்கள் - 74: கே.பி.சுந்தராம்பாள்

தனது குரல் வளத்தாலும் பாட்டுத்திறத்தாலும் தமிழக இளைஞர்களைத் தட்டியெழுப்பிய கே.பி.சுந்தராம்பாள் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 26.10.1908- இல் பிறந்தவர்.
சிறுமியாக இருந்தபோதே இவரது குரலின் தனித்தன்மையும் வசீகரமான பாடும் திறனும் இனங்காணப்பட்டது. கும்பகோணத்தில் இருந்த புகழ்மிக்க பி.எஸ்.வேலுநாயரின் நாடக கம்பெனியில் சேர்ந்த கேபிஎஸ் பத்தாவது வயதில் "நல்லதங்காள்'எனும் நாடகத்தில் நடித்தார். அடுத்தடுத்த நாடக வாய்ப்புகள் அங்கேயே வந்ததால் அவரின் பாட்டியுடன் கும்பகோணத்தில் தங்கினார்.
தமிழகம் முழுவதிலும் இலங்கையிலும் கேபிஎஸ் நாடகங்கள் புகழ்பெற்றன. இவரைப்போலவே நடிப்பிலும் பாட்டிலும் உச்சத்திலிருந்த எஸ்.ஜி.கிட்டப்பாவை மணந்தார். கிட்டப்பாவும் கேபிஎஸ்ஸýம் காங்கிரஸிலும் விடுதலை இயக்கங்களிலும் ஆழமாக ஈடுபட்டனர். கலைத்துறையில் ஆர்வம்மிக்க காங்கிரஸ் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி இவர்களை வழிநடத்தினார். கேபிஎஸ் பாடிய தேசியப்பாடல்கள் இசைத்தட்டுகளாகவும் புத்தகங்களாகவும் வெளிவந்தன. அக்காலத்தில் கீர்த்திமிக்க  "கொலம்பியா' நிறுவனமே இசைத்தட்டை வெளியிட்டது.
 எஸ்.சத்தியமூர்த்தி சொற்பொழிவாற்றும் கூட்டங்களில் அவரின் உரைக்கு முன்னதாக கேபிஎஸ் தனது "கணீர்' குரலில் பாடுவார். தேசியப் பாடல்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த காலத்தில்கூட மிகுந்த துணிச்சலுடன் அவற்றைப் பாடி வந்தார் கேபிஎஸ். 
கேபிஎஸ் பாடத் தொடங்கிய சிறிது நேரத்தில் மக்கள் பரவசத்தோடு ஆயிரக்கணக்கில் கூடுவர். அவர் பாடி- பதப்படுத்தி, உணர்ச்சி அலையை உலவச் செய்த பின்னர் சத்தியமூர்த்தியின் சங்கநாதம் ஒரு பேரெழுச்சியையே உருவாக்கும்.
கேபிஎஸ் பாடிய" காந்தியோ பரம ஏழை சன்யாசி கருஞ்சுதந்திரஞானவிசுவாசி' என்ற பாடல் இசைத்தட்டுவடிவம் பெற்று தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஒலித்தது. 
பகத் சிங் மறைந்தபோது "சிறையில் கண்ணீர் வடித்தாள் பாரதமாதா'என்ற இவரின் பாடல் கண்ணீர்சுரக்கக் காரணமாக இருந்தது. 1933-இல் கிட்டப்பா மறைந்தபோது கேபிஎஸ்ஸýக்கு 26 வயது.
1934 -ஆம் ஆண்டு தமிழகச் சுற்றுப்பயணத்தின்போது கொடுமுடி வருகை புரிந்தார் காந்தியடிகள். தங்கமுலாம் பூசிய டம்ளர் ஒன்றை காந்தியடிகளிடம் அளித்தார் சுந்தராம்பாள். அதனை ஏலத்தில் விட்டார் காந்தியடிகள். கணவன் மறைவுக்குப்பிறகு தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டிருந்த கேபிஎஸ் காந்தியடிகளின் சந்திப்புக்குப் பிறகுதான் மீண்டும் அரசியல்களத்தில் இறங்கினார்.1935 -இல் திரைப்படத் துறையில் நுழைந்தார் சுந்தராம்பாள். உலகளாவிய தமிழ் மக்களிடையே உயர் புகழ் பெற்றார்.
 1937- இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சத்தியமூர்த்தியுடன் இணைந்து சூறாவளியாய்ச் சுழன்றார். "ஓட்டுடையோரெல்லாம் கேட்டிடுங்கள்' என்ற அவரின் பாட்டு தமிழகமெங்கும் முரசு கொட்டியது. " சிறைச்சாலை என்ன செய்யும்' என்று கேபிஎஸ் பாடத் தொடங்கினால் கேட்போர் நிமிர்வர். 24.09.1980-இல் கேபிஎஸ் மறைந்தார். அப்போது அவருக்கு வயது 72. தேசியமும் தமிழுமாக 60 ஆண்டுகள் கோலோச்சியவர் கேபிஎஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com