லண்டன் வரும் கோத்தபய ராஜபக்சவைக் கைது செய்ய வேண்டும்: வைகோ

லண்டன் வரும் கோத்தபய ராஜபக்சவைக் கைது செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
லண்டன் வரும் கோத்தபய ராஜபக்சவைக் கைது செய்ய வேண்டும்: வைகோ

லண்டன் வரும் கோத்தபய ராஜபக்சவைக் கைது செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்ச, கோத்தபய ராஜபக்சே மற்றும் இலங்கைப் படைத்தலைவர்கள் கமால் குணரட்ன, ஜகத் ஜெயசூரியா, சிசிர மெண்டிஸ் மற்றும் பல அதிகாரிகளைக் கைது செய்து, உலக நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, மறுமலர்ச்சி தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள, ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் 36 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்றபோது, அந்தக் கருத்தை வலியுறுத்தினேன்; இந்திய நாடாளுமன்றத்திலும் பேசி இருக்கின்றேன்.

பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில், ஐ.நா.மன்றத்தின் சார்பில், இந்த ஆண்டு காலநிலை மாற்ற மாநாடு நடைபெற இருக்கின்றது. அந்த மாநாட்டில், கோத்தபய ராஜபக்ச கலந்து கொள்ள இருப்பதாகத் தெரிகின்றது.

இனக்கொலை செய்த பல நாடுகளின் ஆட்சியாளர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணையின் முடிவில் தண்டனை பெற்று இருக்கின்றார்கள். இரண்டாம் உலகப் போரின்போது, 3500 யூதர்கள் படுகொலையில் தொடர்பு உடைய, 100 வயதான நாஜி அதிகாரி மீது, ஜெர்மனி நாட்டின் நீதிமன்றத்தில் கடந்த மாதம் விசாரணை தொடங்கி இருக்கின்றது.

அதுபோல, மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களை இழைத்த கோத்தபய ராஜபக்சவைக் கைது செய்து, குற்றக்கூண்டில் நிறுத்த வேண்டும் என, ஈழத்தமிழ் அமைப்புகள் கோரிக்கை பிரித்தானிய அரசின் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தக் கோரிக்கையை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்கின்றது. இந்தத் கருத்தை வலியுறுத்தி, ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சிகளுக்கு நேர்காணல் அளித்துள்ளேன்.

ஐரோப்பியக் கண்டத்தின் பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் ஒருங்கிணைந்து, கோத்தபயவுக்கு எதிரான அறப்போரில் களம் காண வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com