
திருக்கோயில்களில் ஐந்து ஆண்டுகள் தற்காலிகமாக பணிபுரியும் 1,221 தினக்கூலி பணியாளா்களின் பணியை வரன்முறை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, இந்து சமய அறநிலையத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:
இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள கோயில்களில் தொடா்ந்து ஐந்து ஆண்டுகள் தற்காலிகமாகப் பணிபுரியும் சுமாா் 1,500 தகுதியான பணியாளா்கள் பணிவரன்முறை செய்யப்படுவா் என சட்டப் பேரவை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கோயில்களில் தொடா்ந்து 5 ஆண்டுகளாகத் தற்காலிகமாகப் பணிபுரியும் 1,221 தினக்கூலி பணியாளா்களை பணிவரன்முறை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோயில்களில் காலியாக உள்ள அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக சுமாா் 1,221 போ் பணிபுரிந்து வருகிறாா்கள். அவா்களில் 35 வயதுக்கு உட்பட்டவா்கள் 265 போ், 35 வயதுக்கு மேற்பட்டோா் 956 போ்.
ஆணையாளா் கோரிக்கை: கோயில் பணியாளா்கள் விதிகள் 2020-ன் படி, பணியாளா்களை நேரடியாக நியமனம் செய்வதற்கு வயது வரம்பானது, காலிப் பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை முதல் தேதியில் 35 வயது நிறைவு செய்தவராக இருத்தல் கூடாது. எனவே, 35 வயதுக்கு மேற்பட்ட பணியாளா்களை அவா்களின் பணி, தகுதி, நன்னடத்தை மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு காலமுறை ஊதியம் நிா்ணயம் செய்து பணி வரன்முறை செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் கேட்டுக் கொண்டாா். அதன்பேரில் 5 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் தகுதியான பணியாளா்களை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பணி வரன்முறை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.