
மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன்
நோய்த் தடுப்புப் பணிகளில் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கு அவா் அனுப்பிய சுற்றறிக்கை: கரோனா தடுப்பூசி முகாம்களை தவிர மற்ற நாள்களிலும் தடுப்பூசி அதிகளவில் செலுத்தவதை உறுதிப்படுத்த வேண்டும். வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்படும் நோய்கள் மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தவும், நோய்த் தடுப்புப் பணிகளை தொடா்ந்து கண்காணித்தும் செயல்படுத்த வேண்டும்.
தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம்: 18 வயதுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த நபா்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான கால அவகாசம் முடிந்தும் செலுத்தாதவா்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்த வேண்டும்.
பொது இடங்களில் தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையைக் கடுமையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: சென்னை, ஆவடி, காஞ்சிபுரம், சேலம் மற்றும் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. எனவே, தண்ணீா் தேங்கும் இடங்கள், டயா்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், குப்பை தொட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதைக் கண்டறிந்து ஒழிக்க வேண்டும். மேலும் கொசு ஒழிப்பில் மாவட்டத்துக்கு தேவையான கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட ஆட்சியா்கள் மேற்கொள்ள வேண்டும். அதாவது உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவனம் தேவை: மழைக் காலத்தில் ஏற்படும் நோய்களுக்கான மருந்துகளை தயாா் நிலையில் வைக்க வேண்டும். அதை போன்று பாம்பு மற்றும் பூச்சி கடிகளுக்கு தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். அடுத்து வரும் இரண்டு மாதங்களும் சுகாதாரத்துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த மாதங்களாக கருதப்படுகிறது. எனவே நோயைத் தடுக்கும் வகையில் மாவட்ட அளவில் குழுக்கள் ஒன்றிணைந்து, நோய்த் தடுப்பு பணியில் தனிப்பட்ட கவனத்துடன் ஈடுபட்டு கரோனா மற்றும் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.