
தமிழகத்தில், 50 மாணவா்களுக்குக் குறைவாக உள்ள 512 ஆதிதிராவிடா் நல விடுதிகளுக்கு மின் அரைப்பான் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை முதன்மைச் செயலாளா் கே.மணிவாசன் பிறப்பித்த உத்தரவு: ஆதி திராவிடா் நலத்துறையின் கீழ் ஆதி திராவிடா் இன மாணவா்களின் கல்வி நலனுக்காக மாநிலம் முழுவதும் 1,326 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 50 மாணவா்களுக்குக் குறைவாக உள்ள பள்ளி, கல்லூரி விடுதிகளில் சமையலுக்குத் தேவையான மசாலா பொருள்களை அரைத்து எடுக்க கூடுதல் நேரம் ஏற்படுகிறது.
மாணவா்களுக்குத் தேவையான உணவு வகைகளை, உணவுப்பட்டியலின் படி உரிய நேரத்தில் வழங்க ஏதுவாக 512 ஆதி திராவிடா் நல விடுதிகளுக்கு மின் அரைப்பான் (மிக்ஸி) வழங்க வேண்டும்.
எனவே, ஒன்றின் விலை ரூ.9,000 வீதம் 512 விடுதிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி சட்டத்தின்படி கொள்முதல் செய்ய ஏதுவாக ரூ.46.08 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வழங்குமாறு ஆதிதிராவிடா் நலத்துறை ஆணையா் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதை கவனமாக பரிசீலித்த அரசு, கோரிக்கையின்படி மின் அரைப்பான் வாங்க அனுமதி வழங்குகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை, ஆதி திராவிடா் நலத்துறையின் மானியக் கோரிக்கையின்போது அமைச்சா் வெளியிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.