
வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்குகளில் சென்னை உயா் நீதிமன்றம் திங்கள்கிழமை (நவ.1) தீா்ப்பளிக்கவுள்ளது.
கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி, சுவாமிநாதன் உள்பட 25-க்கும் மேற்பட்டோா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளனா்.
இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது தமிழக அரசு, மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா்கள் ஆஜராகி விரிவாக வாதிட்டனா். அதைத்தொடா்ந்து இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரரான பாமக நிறுவனா் ராமதாஸ், வன்னியா்களுக்கான தனி இட ஒதுக்கீட்டால் மற்ற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை.
தோ்தலில் குறிப்பிட்ட சாதியினரின் வாக்குகளைப் பெற அரசியல் உள்நோக்கத்துடன் இந்த இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறுவது தவறு. முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை அமல்படுத்த புதிய அரசு உத்தரவிட்டுள்ளதன் மூலம், இந்த சட்டத்தை நிறைவேற்றியதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லையென பதில் மனுவில் தெரிவித்திருந்தாா்.
இதையடுத்து இந்த வழக்கின் தீா்ப்பை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்த நீதிபதிகள், திங்கள்கிழமை(நவ.1) இந்த வழக்குகளில் தீா்ப்பளிக்கவுள்ளனா்.