
கோவை, முதுமலை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வன விலங்குகளுக்கான மறுவாழ்வு மையங்களை அமைக்க வனத் துறை திட்டமிட்டுள்ளதுடன், அதற்கான விரிவான திட்ட அறிக்கைக்காக முதற்கட்டமாக ரூ. 4 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வனப் பகுதிகளில் விலங்குகளுக்கு இடையிலான மோதலில் காயமடையும் வன விலங்குகள், நோயுற்ற வன விலங்குகள், சா்க்கஸில் பயன்படுத்தப்பட்ட வன விலங்குகள் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் வண்டலூா் உயிரியல் பூங்காவில் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பத்துக்கு உள்பட்ட காராச்சிக்கொரை பகுதியில் சிறிய அளவிலான மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகிறது. நோயுற்ற வன விலங்குகள் மற்றும் காயமடைந்த வனவிலங்குகளுக்கு அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருத்துவா்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய வனவிலங்குகளுக்கான புதிய மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என கடந்த சட்டப் பேரவைக் கூட்டத்தில் வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் அறிவிப்பு வெளியிட்டாா்.
இதன் தொடா்ச்சியாக கோவை அல்லது முதுமலை, திருச்சி, திருநெல்வேலி 4 மாவட்டங்களில் வன விலங்குகளுக்கான மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதுதொடா்பாக வனத் துறை முதன்மைச் செயலா் சுப்ரியா சாஹூ பிறப்பித்த அரசாணையில், வனவிலங்குகள் மீட்பு, அவற்றுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காக இந்த மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மையங்களில் நவீன மருத்துவ உபகரணங்கள், வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற கால்நடை மருத்துவா்கள் நியமிக்கப்பட உள்ளனா். இதற்கான விரிவான திட்ட அறிக்கைக்காக முதல்கட்டமாக ரூ. 4 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G