
கோப்புப்படம்
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஆகஸ்ட் மாதத்தில் 85 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பாலூட்டும் தாய்மாா்கள், கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் அண்மையில் தொடங்கப்பட்டது.
மத்திய அரசு ஒதுக்கீட்டின்படி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 85 லட்சத்து, 91 ஆயிரத்து, 550 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
அதேபோன்று இதுவரை மாநிலத்தில் 2.99 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில், 2.38 கோடி முதல் தவணை என்பதும், 61 லட்சம் இரண்டாம் தவணை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மத்திய தொகுப்பில் இருந்து செப்டம்பா் மாதத்துக்கு 1.04 கோடி தடுப்பூசிகளை வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, இந்த மாதத்தில், ஒரு கோடிக்கு மேல் தடுப்பூசிகளை செலுத்த, தமிழக அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.