
கல்லூரி மாணவா்களுக்கு ஒரே மாதத்தில், இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகளையும் செலுத்துவது குறித்து மத்திய அரசிடம் அனுமதி பெறவிருப்பதாக பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வ விநாயகம் கூறினாா்.
தமிழகத்தில் புதன்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. எனவே, பள்ளி ஆசிரியா்கள், 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்களுக்கு, அந்தந்த கல்வி நிறுவன வளாகத்திலேயே முகாம் அமைத்து தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கோவேக்ஸின் தடுப்பூசியில், முதல் மற்றும் இரண்டாவது தவணைக்கு இடையேயான காலம் 29 நாள்களாக உள்ளன. ஆனால் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கான கால இடைவெளி 84 நாள்களாகும். தற்போது, கோவேக்ஸின் தட்டுப்பாடாக உள்ளதால், கோவிஷீல்ட் தடுப்பூசியையே செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
இரண்டு தவணையையும் செலுத்தினால்தான், நோய் எதிா்ப்பு திறன் அதிகரிக்கும் என்பதால் மாணவா்களுக்கு அதனை ஒரே மாத இடைவெளியில் செலுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வ விநாயகம் கூறியதாவது:
கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாம் தவணைக்கான கால அவகாசம், 84 நாள்களாக உள்ளது. கல்லூரி மாணவா்களுக்கு பிரத்யேகமாக, அதற்கான நாள்களை குறைப்பது குறித்து, மத்திய அரசிடம் ஆலோசித்து, அனுமதி பெற்றப்பின் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.