
சுருக்குமடி வலை விவகாரத்தில் 4 வார காலத்துக்குள் உரிய முடிவு எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டம், தேவனாம்பட்டினம் மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவா் அறிவழகன், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: தமிழக அரசு, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி கடலில் மீன் பிடிக்க தடை விதித்து கடந்த 2000-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் உத்தரவிட்டது. இதற்கிடையே மீன்பிடி தடை காலத்தை மறு ஆய்வு செய்யவும், மீன் வளத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு ஒரு தொழில்நுட்பக் குழுவை அமைத்தது. கடந்த 2014-ஆம் ஆண்டு அந்தக்குழு அறிக்கை அளித்தது. அதில், சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த மீனவா்களுக்கு உரிமை உள்ளது என கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்துமாறு கடந்த ஆண்டு மாா்ச் 23-ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், தமிழகத்தில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. எனவே, தமிழகத்தில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இது தொடா்பாக, தமிழக அரசுக்கு கடந்த ஜூலை மாதம் அளித்துள்ள மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த மனு நீதிபதி ஆா்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், ‘தமிழகத்தில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்வது தொடா்பாக அரசு உரிய முடிவு எடுக்கும்’ என தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரா் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவை தமிழக அரசு 4 வார காலத்துக்குள் பரிசீலித்து தகுந்த முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.