
கம்பத்தில் போலீசாரை கண்டித்து தற்கொலைக்கு முயன்ற சிலம்பரசன்.
கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் பார்வர்டு பிளாக் கட்சிகளிடையே கொடி ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, இளைஞர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
தேனி மாவட்டம், கம்பம் ஏகழூத்து சாலையில் வசிப்பவர் சிலம்பரசன் (36), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
சிலம்பரசன் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்து , ஏகழூத்து சாலை சந்திப்பில் கொடிக்கம்பம் ஊன்றி கொடி ஏற்றியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு பின் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் சேர்ந்து அந்த கம்பத்தில் கொடி ஏற்ற முயன்றுள்ளார்.
இதை தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள் கண்டித்து, கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதையடுத்து தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா தலைமையில் போலீசார் கொடிக்கம்பம் உள்ள இடத்திற்கு வந்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி அந்த கம்பம் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு சொந்தமானது என்று கூறி சென்றனர்.
இதனால் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் இருந்து விலகி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் சேர்ந்த சிலம்பரசன் அதிர்ச்சி அடைந்தார்.
கடந்த 20 ஆண்டு காலமாக அந்த பகுதியில் கட்சியை வளர்த்ததால் தற்பொழுது கொடியேற்ற முடியவில்லை என்று வேதனை அடைந்தார்.
செவ்வாய்க்கிழமை இரவு தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார், அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை செய்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலத்த தீக்காயமடைந்த சிலம்பரசன் பேசியதாக ஒரு விடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அந்த விடியோவில் தான் உடலில் தீ வைத்துக் கொண்டதற்கு காரணம் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் மற்றும் கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார்தான் காரணம் என்று கூறியுள்ளார்.
இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பரவி வருகிறது.
இது பற்றி காவல்துறையினரிடம் கேட்டபோது இருதரப்பிலும் பாரபட்சமின்றி நடந்த விவரங்களை எழுதி வாங்கிக் கொண்டோம் என்று தெரிவித்தனர்.