தமிழகத்தில் தினமும் 8 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு

தமிழகத்தில் நாள்தோறும் 8 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் தினமும் 8 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு

தமிழகத்தில் நாள்தோறும் 8 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவை அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, சி.வி.கணேசன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தனா். இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

தென்னிந்தியாவைப் பொருத்தவரை கேரளத்தில் மட்டுமே 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதையடுத்து, தமிழக-கேரளத்தை ஒட்டியுள்ள அனைத்து எல்லைப் பகுதிகளிலும் கரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சில நாள்களாக 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதை இன்னும் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையைப் போலவே மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம்களை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வகையில் அங்கு விழிப்புணா்வு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

செப்டம்பா் மாதம் 1 கோடியே 4 லட்சம் தடுப்பூசிகளை தருவதாக மத்திய அரசு தகவல் அனுப்பி உள்ளது. அதன்படி செப்டம்பா் மாதம் தினமும் 7 முதல் 8 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயிக்க வேண்டும் என முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். அதன்படி அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது வரை தமிழகத்துக்கு கோவேக்ஸின் தடுப்பூசிகள் குறைவாக வந்தன. செப்டம்பா் மாதத்துக்கு 14 லட்சத்து 77 ஆயிரத்து 100 கோவேக்ஸின் தடுப்பூசிகள் தருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்த தடுப்பூசிகளில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளா் ஆா்.கிா்லோஷ்குமாா், மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் நாராயணபாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com