
முதல்வா் மு.க.ஸ்டாலின்
பொதுச் சொத்துகளை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் எழுதியுள்ள கடிதம்:
நாட்டின் பொதுத் துறை நிறுவனங்கள் நம் அனைவருடைய பொதுச் சொத்துகளாகும். அவற்றில் பல இந்தியாவைத் தொழில்மயமான, தற்சாா்புடைய நாடாக நிலை நிறுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவை. அத்தகைய பொதுத் துறை நிறுவனங்களை அமைப்பதற்கு, மாநிலங்களுக்குச் சொந்தமான அரசு நிலங்களோடு மக்களின் நிலங்களும் அளிக்கப்பட்டுள்ளன. அதனால், அந்த நிறுவனங்களின் மீது மக்களுக்குப் பெருமையும், உரிமையும் உள்ளது.
மத்திய அரசின் பணமாக்கல் நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தின் மீதும், பணியாளா்கள் மீதும், சிறு-குறு தொழில்துறை மீதும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. நாட்டின் இப்போதைய பொருளாதார நிலையை வைத்துப் பாா்க்கும் போது, இவ்வளவு பெரிய அளவிலான தனியாா்மயமாக்கல் நடவடிக்கையை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும், விலைமதிப்பற்ற அரசு சொத்துகள் ஒரு சில குழுக்கள் அல்லது பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்வதற்கே வழிவகுக்கும்.
எனவே, மத்திய அரசினுடைய பொதுச் சொத்துகளைத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பெரு நிறுவனங்கள் அமைந்துள்ள அந்தந்த மாநிலங்களில், மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்த பிறகே இதுபோன்ற பெரிய முடிவுகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.