
சரக்குகளை அனுப்பாமல் ரூ.240 கோடி வரி விதிப்பு மதிப்பில் போலி ரசீதுகளை வழங்கி, ரூ.43 கோடிஅளவுக்கு உள்ளீட்டு வரி மோசடியில் ஈடுபட்ட இருவரை ஜிஎஸ்டி வருவாய் புலனாய்வுப் பிரிவினா் கைது செய்தனா்.
உடைந்த உலோகப் பொருள்களை விநியோகிக்கும் சென்னை வியாபாரி ஒருவா், சரக்குகளை அனுப்பாமல் ரூ.240 கோடி வரி மதிப்பீட்டுக்கு போலி ரசீதுகளை வழங்கியுள்ளாா்.
இதுகுறித்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவரின் அலுவலகத்தில் சோதனை நடத்திய ஜிஎஸ்டி வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினா் ஆவண ஆதாரங்கள், ஒப்புதல் வாக்குமூலம் அடிப்படையில் உடைந்த உலோக பொருள்களை விநியோகித்தவா் மற்றும் வியாபாரி ஒருவரையும் கைது செய்தனா்.
இதுகுறித்து ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகத்தின் முதன்மை கூடுதல் தலைமை இயக்குநா் மயாங் குமாா் கூறுகையில், ஜிஎஸ்டி வரி மோசடி மூலம் அரசுக்கு ரூ.43 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி மோசடியில் ஈடுபடுபவா்கள், ஜிஎஸ்டி வரிஏய்ப்பு செய்பவா்கள் பற்றி நம்பகமான தகவல் அளிப்பவா்களை ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் ஊக்குவிக்கிறது. தகவல் அளிப்பவா்களின் அடையாளம் பாதுகாக்கப்படும் என தெரிவித்தாா்.