
தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருவதாக மத்திய தகவல் ஒலிபரப்பு இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல். முருகன் சென்னை அருகே மதுரவாயல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை இன்று ஆய்வு செய்தார்.
தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்தவர்களிடம் முகக் கவசம் அணிதல், தவறாமல் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல் ஆகிய கரோனா தடுப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை அவர் விளக்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர், இந்தியா முழுவதும் இதுவரை 65 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாகவும், நேற்று வரை தமிழகத்தில் 3.36 கோடி தடுப்பூசிகள் செலுத்தபட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிக்க- ஆசிரியப் பணி மாமனிதர்களை உருவாக்கும் மகத்தான பணி: முதல்வர் ஸ்டாலின் ஆசிரியர் நாள் வாழ்த்து
நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்த அவர், தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு தங்கு தடையின்றி வழங்கி வருவதாக தெரிவித்தார்.
மேலும், அரசு நிர்ணயித்துள்ள குறிப்பிட்ட தேதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்ற இலக்கை அடைவதை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். நிகழ்ச்சியில் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் மரு.செல்வவிநாயகம், சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) மரு.மணீஷ் எஸ் நர்னவாரே மற்றும் தமிழக சுகாதார துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.