
நிபா வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கிண்டி மடுவின்கரை சென்னை மேல்நிலைப்பள்ளியில் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமில் பயனாளர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கேரளத்தில் ஒரு சிறுவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்ற தகவல் கிடைத்திருக்கிறது.
நானும், துறையின் செயலாளர் அவர்களும் கோவை மாவட்டத்தில் உள்ள வாழையாறு பகுதிக்குச் சென்று காய்ச்சல் முகாம்கள் நடத்துவது, கேரளத்திலிருந்து வருபவர்களை பரிசோதனை செய்து ஆய்வுக்குட்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொண்டோம். இன்று காலையில் நிஃபா வைரஸ் பாதிப்பு குறித்து தகவல் கிடைத்தவுடன் கேரளத்தோடு தொடர்புடைய தமிழகத்தின் 9 மாவட்டங்களின் மாவட்ட இணை இயக்குநர், சுகாதார அலுவலர்கள் ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- 389 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
கேரளத்திலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு ஏற்கெனவே ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை, இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தியிருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதி என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது கூடுதலாக நிஃபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துறையின் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கேரளத்தில் இருந்து தமிழகம் வருபவர்கள் இரு சக்கர வாகனத்திலோ அல்லது நடந்து வயதால்கூட அவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பாக தமிழகம் இருக்கிறது.
பக்கத்து மாநிலத்திலிருந்து வருகிற நோய்களை மாவட்ட எல்லைகளில் தடுக்கிற பணிகள் தமிழகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே சர்வதேச விமான நிலையத்தில் ஆய்வு செய்து தெர்மல் ஸ்கேன் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து 13 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகள் வழங்குகிற அதிநவீன இயந்திரம் இங்கு பொறுத்தப்பட்டுள்ளது.
இது இந்தியாவிலேயே மீனம்பாக்கத்தில் மட்டுமே செய்திருக்கிற சிறப்பான செயல்பாடாகும். இப்படி நாம் மிகுந்த கண்காணிப்போடு இருக்கிறோம். எனவே நிஃபா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என்றார்.