செப்டம்பர் 11 மகாகவி நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

எழுத்து, கவிதைகள் வழியாக நாட்டு விடுதலைக்கு உழைத்திட்ட பாரதியார் நினைவு தினம் (செப். 11) ஆண்டுதோறும், மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 11 மகாகவி நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


சென்னை: எழுத்து, கவிதைகள் வழியாக நாட்டு விடுதலைக்கு உழைத்திட்ட பாரதியார் நினைவு தினம் (செப். 11) ஆண்டுதோறும், மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:-

தேசப் பற்று, தெய்வப் பற்று, தமிழ்ப் பற்று, மானுடப் பற்று ஆகிய நான்கும் கலந்தவர்தான் பாரதியார். நாட்டு விடுதலைக்காகப் போராடியவராக மட்டும் இருந்திருந்தால் அதற்காக மட்டுமே நினைவுகூரப்பட்டிருப்பார். அதையும் தாண்டி, சமூக, பொருளாதார உரிமைகளுக்காகவும் எழுதியதால்தான் பாரதியார் கவிதை வரிகளாய் உலவி வருகிறார். இதனாலேயே திமுக அரசு அமைந்து கருணாநிதி முதல்வரானபோது எட்டயபுரத்தில் பாரதியார் வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதனை நினைவில்லம் ஆக்கினார்கள்.

பாரதிக்கு சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவரது நூற்றாண்டு நினைவை ஒட்டியும் 14 முக்கிய அறிவிப்புகளை  வெளியிடுகிறேன்.

பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் தேதியன்று, அரசு சார்பில் இனி ஆண்டுதோறும் மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும். இதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி, பாரதி இளம்கவிஞர் விருதானது மாணவி, மாணவர் ஒருவருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையுடன் அளிக்கப்படும்.

பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள், கட்டுரைகளைத் தொகுத்து "மனதில் உறுதி வேண்டும்' என்ற புத்தகமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும்.

பாரதியின் உருவச் சிலைகள், உருவம் பொறித்த கலைப் பொருள்கள் பூம்புகார் நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்கப்படும்.

பாரதியின் கையெழுத்துப் பிரதிகள் தேடித் தொகுக்கப்பட்டு அவை வடிவம் மாறாமல் செம்பதிப்பாக  வெளியிடப்படும். பாரதியின் வாழ்வை சிறுவர்கள் அறியும் வகையில் சித்திரக்கதை நூலாகவும், பாரதியாரின் சிறந்த நூறு பாடல்களைத் தேர்வு செய்து தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஓவியர்களின் வண்ண ஓவியங்களுடன் நூலாக வெளியிடப்படும். மேலும், பாரதியாரின் படைப்புகள், பாரதியார் குறித்த முக்கிய ஆய்வு நூல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்.

பாரதியாரின் நூல்கள், அவை பற்றிய ஆய்வு நூல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு எட்டயபுரம், திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லங்கள், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் அமையவுள்ள கலைஞர் நினைவு நூலகம் ஆகியவற்றில் வைக்கப்படும். இதற்கு பாரதியியல் என்ற தனிப்பிரிவு உருவாக்கப்படும்.

உலகத் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து பாரதி குறித்த நிகழ்வுகள் பாரெங்கும் பாரதி என்ற தலைப்பில் நடத்தப்படும்.

திரைப்படங்களில் இடம்பெற்ற பாரதியாரின் பாடல்களைக் கொண்ட திரையில் பாரதி என்ற நிகழ்வு, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கரோனா பரவல் முழுமையாக ஓய்ந்த பிறகு நடத்தப்படும்.
பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டுக்கு, சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சியொன்று செய்தித் துறையின் சார்பில் நடத்தப்படும்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும்.

உத்தரபிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பராமரிக்க அரசின் சார்பில் நிதியுதவி அளிக்கப்படும்.

பாரதியார் படைப்புகளைக் குறும்படம் மற்றும் நாடக வடிவில் தயாரிக்க நிதியுதவி வழங்கி அவற்றை நவீன ஊடகங்களின் வழியாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பாரதியாரின் உணர்வுமிக்க பாடல் வரிகளைப் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் எழுதியும் வரைந்தும் பரப்பப்படும்.

பெண் கல்வியையும், பெண்ணிடம் துணிச்சலையும் வலியுறுத்தியவர் மகாகவி பாரதியார். எனவே, ஊரக வளர்ச்சித் துறையில் செயல்படுத்தப்பட உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாழ்வாதாரப் பூங்காவுக்கு, மகாகவி பாரதியார் வாழ்வாதாரப் பூங்கா எனப் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

6 பாரதி ஆய்வாளர்களுக்கு விருது, பாராட்டுச் சான்றுகள்


மகாகவி பாரதியாரின் ஆய்வுப் பணிகளில் முக்கியப் பங்காற்றிய 6 ஆய்வாளர்களுக்கு தலா ரூ.3 லட்சமும், விருது, பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிவிப்பு:-

மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும், அவரின் படைப்புகள் பற்றியும் ஆய்வாளர்கள் பலர் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்துள்ளனர். அவர்களில் முக்கியப் பங்காற்றிய பாரதி ஆய்வாளர்களான, மறைந்த பெ.தூரன், ரா.அ.பத்மநாபன், தொ.மு.சி.ரகுநாதன், இளசை மணியன் ஆகியோர்களின் நினைவாக அவர்களது குடும்பத்துக்கும், மூத்த ஆய்வாளர் சீனி.விசுவநாதன், பேராசிரியர் ய.மணிகண்டன் ஆகியோருக்கும் தலா ரூ.3 லட்சமும், விருதும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com