தபால் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் தமிழ் பாடம் இணைக்கப்பட வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்

தபால் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் தமிழ் பாடம் இணைக்கப்பட வேண்டும் என மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.  
சு.வெங்கடேசன் எம்.பி.
சு.வெங்கடேசன் எம்.பி.

தபால் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் தமிழ் பாடம் இணைக்கப்பட வேண்டும் என மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார். 
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தபால் துறையில் மக்கள் தொடர்பு நிலையில் உள்ள அலுவலர்கள் நியமனங்களுக்கு நடைபெறும் தேர்வுகளில் மாநில மொழி தேர்ச்சிக்கு எந்த ஏற்பாடும் இல்லை. 
அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர், ஆய்வாளர்கள் ஆகிய பணிகளை செய்யும் ஊழியர்களுக்கான தேர்வுகளை அலுவலர் நியமன ஆணையம் ( Staff Selection Commission) நடத்தும் போது தமிழில் அவர்கள் உரையாடக் கூடியவர்களா என்று கூட சோதித்துப் பார்ப்பதில்லை. இவர்களிடம் சேவை நாடி வரும் பொதுமக்கள் திண்டாடுகிறார்கள். அந்த பணியாளர்களும் தங்கள் பணியை திறம்பட ஆற்ற முடிவதில்லை. ஆய்வாளர்கள் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பவர்கள். கடந்த 10 ஆண்டுகளில் ஆய்வாளர் பணிக்கு நடைபெற்றுள்ள நேரடி நியமனங்களில் தேர்வு செய்யப்பட்ட 60 பேரில் 57 பேர் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று அறிய வருகிறேன். 
தபால் அலுவலகங்களின் கதவைத் தட்டுபவர்களில் பெரும்பான்மையோர் கிராமங்களில் இருந்து வருபவர்கள். பொருளாதாரத்தில் அடித்தட்டு மக்கள். இத்தகைய கோடிக்கணக்கான மக்களை இணைக்கிற தபால் ஊழியர்கள் தமிழ் அறிந்திருக்க வேண்டாமா? 

எனவே தபால் ஊழியர் நியமன முறையில் தமிழ்த் தேர்ச்சிக்கான தேர்வு இணைக்கப்பட வேண்டும். பள்ளி இறுதி தேர்வு/ மேல்நிலை கல்வித் தேர்வில் தமிழ் பாடமாக இருந்து அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த தேர்வில் விதி விலக்கு அளிக்கலாம். இக்கோரிக்கையை பரிசீலித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். இது அஞ்சல் சேவையை மேம்படுத்தும். அதை நாடி வரும் மக்களுக்கும் பெரும் பயன் தரும். மத்திய அரசு இக்கோரிக்கைக்கு செவிமடுக்குமென்று நம்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com