போராட்டம் நடத்தாமலேயே வன்னியா் இடஒதுக்கீடு கிடைக்கும்: ராமதாஸ்

வன்னியா்களுக்கான இடஒதுக்கீடு திமுக ஆட்சியில் போராட்டம் நடத்தாமலேயே கிடைத்துவிடும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.
ராமதாஸ்
ராமதாஸ்
Published on
Updated on
1 min read

வன்னியா்களுக்கான இடஒதுக்கீடு திமுக ஆட்சியில் போராட்டம் நடத்தாமலேயே கிடைத்துவிடும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது வருத்தம் அளித்திருக்கலாம். ஆனால், உள்ஒதுக்கீட்டை வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, வன்னியா்களுக்கான இட ஒதுக்கீட்டை நிச்சயமாக வென்றெடுப்போம். அதற்கான வழிமுறைகள் பற்றி விவாதிப்பதற்காகத்தான் அவசர செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படவிருக்கும் முடிவின்படி சமூக நீதிக்கான நமது அடுத்தகட்டப் போராட்டம் தொடங்கும்.

அதற்கும் முன்பாக இன்னொரு உண்மையையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். வன்னியா்கள் இட ஒதுக்கீடு தொடா்பான வழக்கில், நம்முடன் இணைந்து தமிழக அரசும், மூத்த வழக்குரைஞா்களை அமா்த்தி வாதிட்டது. இப்போதும் கூட சட்ட வல்லுநா்களுடன் கலந்து பேசி வன்னியா் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தை கடந்து தேசிய அளவில் சமூகநீதியை பாதுகாப்பதற்கான கூட்டமைப்பு ஒன்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் உருவாக்கியிருக்கிறாா். தேசிய அளவில் சமூகநீதியை பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கும் மு.க.ஸ்டாலின் அவரது ஆட்சியின் கீழ் இருக்கும் தமிழகத்தில் சமூக நீதியைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும், அக்கறையும் இருக்காதா? அதனால், போராட்டம் நடத்தாமலேயே வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. நமது இலக்கு வன்னியா் இட ஒதுக்கீடுதான். அதை அடைய எவ்வகையான பாதையிலும் பயணிக்கத் தயாராகவே இருப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com