ஹஜ் பயணம்: தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவு

ஹஜ் புனித பயணத்தின் புறப்பாட்டு இடமாக  சென்னையை மீண்டும் இணைக்கக் கோரிய வழக்கில், அது குறித்து பரிசீலிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹஜ் பயணம்: தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவு
ஹஜ் பயணம்: தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவு
Published on
Updated on
2 min read


சென்னை: ஹஜ் புனித பயணத்தின் புறப்பாட்டு இடமாக  சென்னையை மீண்டும் இணைக்கக் கோரிய வழக்கில், அது குறித்து பரிசீலிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் 21 இடங்கள் ஹஜ் புனிதப் பயணத்தின் புறப்பாட்டு இடமாக இருந்த நிலையில், கரோனா கட்டுப்பாடுகளின் போது, இதனை 10 ஆகக் குறைத்து இந்திய ஹஜ் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. அப்போது சென்னை ஹஜ் புறப்பாட்டு இடங்களின் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஹஜ் புறப்பாட்டு இடமாக மீண்டும் சென்னையை அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு இந்திய ஹஜ் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

சென்னையில் இருந்தே ஹஜ் புனிதப் பயணத்தைத் தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

இதுகுறித்து, மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்விக்கு, முதல்வா் ஸ்டாலின் மார்ச் மாதம் எழுதிய கடிதம்:

2022-ஆம் ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணத்துக்கான புறப்பாட்டு இடமாக சென்னை விமான நிலையத்தை அனுமதிக்க வேண்டுமெனக் கோரி பிரதமருக்கு கடந்த ஆண்டு நவம்பரில் கடிதம் எழுதப்பட்டது. இதன்மீது தங்களது கவனத்தை ஈா்க்க விரும்புகிறேன். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சென்னையில் இருந்து சவூதி அரேபியாவுக்கு, தங்களது பயணத்தைத் தொடங்குகின்றனா்.

தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபாா் மற்றும் லட்சத்தீவுகள் பகுதிகளில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்பவா்கள் பயனடையும் வகையில் 2020-ஆம் ஆண்டு வரை நேரடியாக சென்னையிலிருந்து ஹஜ் விமானங்கள் இயக்கப்பட்டன.

2019-ஆம் ஆண்டில் மட்டும் சென்னையில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தங்களது ஹஜ் புனிதப் பயணத்தை தொடங்கினா். இந்தச் சூழ்நிலையில், கரோனா காரணமாக இந்திய ஹஜ் குழுவானது புனிதப் பயணத்துக்கான புறப்பாட்டு இடங்களின் எண்ணிக்கையை 21-லிருந்து 10 ஆகக் குறைத்தது. தமிழ்நாட்டைச் சோ்ந்த ஹஜ் பயணிகள் தங்களது புனித பயணத்தை கேரள மாநிலம் கொச்சியில் இருந்து தொடங்க அனுமதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோா், கொச்சிக்குச் சென்று பயணத்தைத் தொடங்குவதால் 700 கிலோமீட்டருக்கு மேல் கூடுதலாகப் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் பல சிரமங்களையும், கூடுதல் செலவுகளையும் எதிா்கொள்ள வேண்டியுள்ளது.

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பிற நாட்டவருக்கு கரோனா நோய்த் தொற்றுக்கான கட்டுப்பாடுகளை சவூதி அரசானது தளா்த்தியுள்ளது. எனவே, ஹஜ் புனிதப் பயணத்துக்கான புறப்பாட்டு இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதுதொடா்பாக இஸ்லாமிய சமூகத்தினரிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

எனவே, தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோரின் வசதியைக் கருத்தில் கொண்டு மீண்டும் சென்னையைப் புறப்பாட்டு இடமாக அறிவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com