மானாமதுரை: வெண்பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கிய அழகர்; ஆயிரக்கணக்கானோர் தரிசனம்!

மானாமதுரையில் சனிக்கிழமை காலை வீர அழகர் வெண்பட்டு உடுத்தி கோவிந்தா கோஷங்களுக்கிடையில் வைகை ஆற்றுக்குள் இறங்கினார்.
மானாமதுரை சித்திரை திருவிழாவில் வெள்ளிக்கிழமை காலை வெண்பட்டு உடுத்தி ஸ்ரீ வீர அழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
மானாமதுரை சித்திரை திருவிழாவில் வெள்ளிக்கிழமை காலை வெண்பட்டு உடுத்தி ஸ்ரீ வீர அழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்றுவரும் சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக சனிக்கிழமை காலை வீர அழகர் வெண்பட்டு உடுத்தி கோவிந்தா கோஷங்களுக்கிடையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசிக்க வைகை ஆற்றுக்குள் இறங்கினார்.

சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்கு உள்பட்ட மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீர அழகர் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி வீர அழகர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து மூலவர் சுந்தரராஜ பெருமாளை தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து கோயிலுக்கு பின்புறம் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படியில் வீர அழகர் கள்ளழகர் வேடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பலித்தார். அதன்பின் நள்ளிரவு இங்கிருந்து பூப்பல்லக்கில் எழுந்தருளி ஆற்றில் இறங்குவதற்காக புறப்பட்டு வந்த அழகரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளழகர் வேடத்தில் மானாமதுரை ஸ்ரீ வீர அழகர்
கள்ளழகர் வேடத்தில் மானாமதுரை ஸ்ரீ வீர அழகர்

பின்பு மேல்கரை பகுதியில் உள்ள தியாக வினோத பெருமாள் கோயிலில் உற்சவர் பெருமாள் பூப்பல்லக்கில் வந்த வீர அழகரை எதிர்கொண்டு அழைத்து தனது கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷங்களுடன் ஆடிப் பாடினர்.

அதன்பின் சனிக்கிழமை காலை வெள்ளைக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஆற்றில் இறங்குவதற்காக புறப்பட்ட வீர அழகர் வீதிகளில் ஆரோகணித்து வந்தார். வீதிகளில் பக்தர்கள் அழகரை வரவேற்று  பூஜைகள் நடத்தி தரிசித்தனர்.

ஆனந்தவல்லி சோமநாதர் கோயில் முன்பு வந்தடைந்த  வீர அழகருக்கு கோயில் சார்பில் பட்டு வஸ்திரங்கள் வழங்கப்பட்டு  பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் காலை 8.10 மணிக்கு ஆனந்தவல்லி அம்மன் கோயில் எதிரே அழகர் ஆற்றில் இறங்கினார். அப்போது அவர் வெண்பட்டு உடுத்தியிருந்தார். அழகர் ஆற்றில் இறங்கியதும் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷமிட்டு அழகரை தரிசனம் செய்தனர்.

மானாமதுரையில் ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்தைக் கண்டு தரிசிக்க திரண்டிருந்த பக்தர்கள்
மானாமதுரையில் ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்தைக் கண்டு தரிசிக்க திரண்டிருந்த பக்தர்கள்

கள்ளழகர் வேடம் பூண்டு வந்தவர்கள் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். திரி எடுத்து  ஆடி வந்த பக்தர்கள் அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறினர்.

வைகையாற்றில் ஏராளமான திருக்கண்களில் எழுந்தருளி அருள்பாலித்த அழகர் பின்னர் ஆற்றுக்குள் நிறுத்தப்பட்டிருந்த ஆயிரம் பொன் சப்பரத்துக்கு சென்றடைந்தார். அங்கு பக்தர்கள் அழகருக்கு பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனர். அதன்பின் பக்தர்கள் சப்பரத்தைரை தேரை இழுத்து வந்து வைகையாற்றுக்குள் அமைக்கபப்ட்டிருந்த செய்களத்தூர்  கிராமத்தார் மண்டகப்படி அருகே கொண்டுவந்து சேர்த்தனர். அதன்பின் இந்த மண்டகப்படியில் அழகர் தங்கி அருள்பாலித்தார்.

ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்தைக் காண மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் திரண்டிருந்தனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி குடும்பத்தினருடன் வந்து அழரை தரிசித்தார் மானாமதுரை போலீஸ் டி.எஸ்.பி சுந்தரமாணிக்கம் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com