நெல்லை அருகே நிலத்தகராறு: பெண் உட்பட 3 பேர் கொலை

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து அருகே நிலத்தகராறில் பெண் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
மரியராஜ் / வசந்தா / ஜேசுராஜ்
மரியராஜ் / வசந்தா / ஜேசுராஜ்
Published on
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே நிலத்தகராறு காரணமாக இரு குடும்பத்தினரிடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில் பெண் அரசு ஊழியர் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே உள்ள நாஞ்சான்குளம் பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் ஜேசுராஜ் (65). கட்டிட ஒப்பந்ததாரர். இவரது குடும்பத்துக்கும், இவரது உறவினர் அழகுமுத்து என்பவரது குடும்பத்துக்கும் இடையே நிலப் பிரச்சினை இருந்துவந்ததாம். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த நிலத்தகராறு தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை இரு குடும்பத்தினருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாம். இதில், அழகு முத்து குடும்பத்தைச் சேர்ந்த சிலர், ஜேசுராஜ், மரியராஜ் (55), வசந்தா (45), ஆமோஸ்(24), ஜேசுராஜ்(45) ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த 5 பேரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, ஜேசுராஜ், மரியராஜ், வசந்தா ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். ஆமோஸ், மற்றொரு ஜேசுராஜ் ஆகிய இருவருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்த வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த மானூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கிருஷ்ணராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஒரே ஊரைச் சேர்ந்த இரு குடும்பத்திற்கிடையே நீண்ட நாள்களாக நிலத்தகராறு இருந்து வந்ததாம். இதில், ஞாயிற்றுக்கிழமை ஒரு தரப்பினர் அந்த இடத்தில் ஆள்குழாய் கிணறு அமைக்க முயன்றபோது, இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது.

உயிரிழந்த வசந்தா பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவுரு எழுத்தராக வேலை பார்த்து வந்தார். நிலத் தகராறில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் நாஞ்சான்குளம் கிராமத்தில் ஏராளமான போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதுகுறித்து திருநெல்வேலி சரக டிஐஜி கூறியது, “கொலையாளிகளை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலையில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார். இதையடுத்து, இந்த கொலை தொடர்பாக 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com