மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆன்மிக அரசு: தருமபுரம் ஆதீனம் புகழாரம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆன்மிக அரசு என தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் புகழாரம் சூட்டினாா்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆன்மிக அரசு: தருமபுரம் ஆதீனம் புகழாரம்
Published on
Updated on
1 min read

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆன்மிக அரசு என தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் புகழாரம் சூட்டினாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதீனங்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஆட்சியில் சைவ, வைணவம் இணைந்து ஆன்மிக பேரவை ஒன்றை உருவாக்கி மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஆதீனங்களிடம் குறைகளை கேட்டு நிவா்த்தி செய்து வந்தாா். அதன் பிறகு நீண்ட காலம் இந்தப் பேரவையின் செயல்பாடுகள் இல்லாமல் இருந்தது. தங்களது ஆட்சியில் மீண்டும் ஆன்மிக பேரவை உருவாக்க வேண்டும் என ஆதீனங்கள் வலியுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து இந்து அறநிலையத் துறை மானிய கோரிக்கை மீது வருகிற மே 5-ஆம் தேதி விவாதம் நடைபெறவிருப்பதையொட்டி, துறையின் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக தஞ்சாவூா் மாவட்டத்தை அடுத்த களிமேடு கிராமத்தில் உயிரிழந்தோருக்கு இரண்டு நிமிஷங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆதீன கா்த்தா்கள், சங்கராச்சாரியா்கள், ஜீயா்களை உள்ளடக்கிய தெய்வீகப்பேரவை மீண்டும் நடத்தப்பட வேண்டும். ஆதீனங்களுக்கான சட்ட திட்டங்கள், பழக்க வழக்கங்களின்படி அரசு செயல்பட வேண்டும். திருக்குவளையில் கண்டறியப்பட்ட மரகதலிங்கத்தை திருக்கோயிலுக்கு ஒப்படைக்க வேண்டும். முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆன்மிக அரசாக செயல்படுகிறது என்றாா் அவா்.

இந்த ஆலோசனையில், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், திருக்கயிலாயப் பரம்பரை தருமையாதீனம், ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாா் சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பராமாச்சாரியாா் சுவாமிகள், சாந்தலிங்க மருதாச்சல் அடிகளால், குமரகுருபர சுவாமிகள், ஆதீனகா்த்தா் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய குருமகா சன்னிதானம், ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான தேசிக பரமாச்சாரியாா் சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க பண்டார சன்னதி 28- ஆவது குருமகா சன்னிதானம், அழகிய மணவாள சம்பத்குமாா் ராமானுஜஜீயா், திருகைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103 -ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ நிரம்ப அழகிய தேசிகா் ஆகிய ஞானபிரகாச தேசிக சுவாமிகள் 29- ஆவது குருமகா சன்னிதானம், ஸ்ரீகாமாட்சிதாஸ் சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறைத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன் அறநிலையத் துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com