நம்முடைய சொத்துக்களை நாமே இப்படி சேதப்படுத்தலாமா? - சைலேந்திர பாபு வேதனை விடியோ

நம்முடைய சொத்துக்களை நாமே இப்படி சேதப்படுத்தலாமா? - சைலேந்திர பாபு வேதனை விடியோ

அரசுப் பள்ளிகள்தான் நம்முடைய சொத்து. அதனை இப்படி சேதப்படுத்தலாமா என்று பள்ளி மாணவர்களுக்கு காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபு அறிவுரை கூறியுள்ளார்.


சென்னை : அரசுப் பள்ளிகள்தான் நம்முடைய சொத்து. அதனை இப்படி சேதப்படுத்தலாமா என்று பள்ளி மாணவர்களுக்கு காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபு அறிவுரை கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக ஆசிரியர்களை மாணவர்கள் தாக்கும் விடியோ, வகுப்பறையில் வன்முறையில் ஈடுபடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக பள்ளி வகுப்பைறைகளில் உள்ள மேஜை, நற்காலிகளை மாணவர்கள் உடைக்கும் விடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபு விடியோ பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
அதில், ' மாணவர்களுக்கு வணக்கம். இரண்டு காணொலிகளைப் பார்த்தேன், அதில் அரசு பள்ளி மாணவர் ஒருவர் ஆசியரை தாக்க முற்படுகிறார். இன்னொரு காணொலியில் வகுப்பறையில்  இருக்கக் கூடிய டேபிள், சேர் போன்ற பொருள்களை சிரமப்பட்டு உடைக்கிறார்கள். இதனைப் பார்க்கும் போது பாரதியார் கூறியதைப் போல "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்பது தான் நினைவுக்கு வந்தது. அந்த மன நிலையில் தான் பேசுகிறேன். மாணவர்களே நானும் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். நம் பெற்றோர்கள் ஏன் நம்மை அரசுப்பள்ளிக்கு அனுப்பினார்கள் என்று யோசித்து பார்த்தீர்களா ?.

போதிய வருமானம் இல்லாத பெற்றொர்களே அரசுப் பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்கிறார்கள். அரசுப் பள்ளி மாணவர்களே! உங்கள் பொற்றோர்களிடம் அதிகமான சொத்துக்கள் கிடையாது. ஆனால் உங்களுக்கு அப்படி அல்லது. உங்களுக்கு நிறைய சொத்து இருக்கிறது. உங்களுக்கு நிறைய ஆதாரங்கள் இருக்கிறது. நீங்கள் படிக்கும் அரசுப் பள்ளிதான் உங்கள் சொத்து! அங்கிருக்கும் விளையாட்டு மைதானம், வகுப்பறை, மேஜை, நாற்காலிகள், அங்கிருக்கும் ஆசிரியர்கள் அனைத்தும் உங்கள் சொத்து. 

நாங்கள் படிக்கும் போது பென்ச் டேபிள் கிடையாது தரையில் அமர்ந்துதான் படிப்போம். இப்போது அரசு உங்களுக்கு நிறைய வசதிகள் செய்து கொடுக்கிறது. அதை நீங்கள் உடைக்கிறீர்கள்.அரசு பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் தான் உங்கள் சொத்து. அவர்களால் தான் நான் இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன்.

ஆனால் தற்போது ஆசிரியர்களை அடிக்க மாணவர்கள் கை ஓங்குவதைப் பார்க் முடிகிறது. எப்படி இந்தச் சூழல் ஏற்பட்டது என்பது தெரியவில்லை, இது வேதனை அளிப்பதாக உள்ளது. இந்த ஆசிரியர்கள் நமக்கு கணிதம், அறிவியல், புவியியல், வரலாறு, கணிப்பொறி ஆகியவற்றை நமக்கு சொல்லித் தருவார்கள். ஆசிரியர்கள் தான் நமக்கு மிகப் பெரிய ஆதாரம். அவர்கள் தான் மிகப்பெரிய சொத்து. அறிவையையும், செயல்திறனையும், நல்ல மனப்பான்மையையும் கற்றுக் கொள்ள வேண்டிய நீங்கள், இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஏன் ஈடுபடுகிறீர்கள். இது நமது வீட்டையே நாமே தீவைத்து கொளுத்துவது போல் உள்ளது. நம் கைகளை நாமே வெட்டிப் போடுவது போல் இருக்கிறது.

நமக்கான ஆதாரங்களை நாமே அழிக்கலாமா? கடவுளுக்கும் மேலான அவர்களிடமா இந்த வன்முறை? 

தயவுசெய்து மாணவர்கள் இது போன்ற செயல்களை இனியும் செய்ய வேண்டாம். 
பள்ளிக்கு மிகப்பெரிய நோக்கத்தோடு நாம் வருகிறோம். நீங்கள் ஒரு நல்ல மனிதனாக , சிந்தனை மிக்க மனிதனாக வளர வேண்டிய மாணவர்கள், அதற்கான பயிற்சிக்கூடம் தான் பள்ளிக்குடம். அந்த கூடத்திற்கு மரியாதை கொடுக்கவேண்டும். 

ஆசிரியர்களை உயர்வாக மதிக்க வேண்டும். உங்களுடையே மனநிலை மாற வேண்டும். பள்ளிக்கூடங்களில் இதுபோன்ற வன்முறைகள் சட்டப்படி குற்றம். சட்டம் மாணவர்களுக்கு சில பாதுகாப்பை கொடுத்திருந்தாலும் இது குற்றமாகக் கருதப்படும் எனவே இதுபோன்ற செயல்களை மாணவர்கள் மீண்டும் ஈடுபட வேண்டாம்', எனகேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த விடியோ பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com