அரசு மருத்துவா்களின் வருகையை கண்காணிக்க டீன்களுக்கு அறிவுறுத்தல்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அரசு மருத்துவமனை மருத்துவா்களின் வருகையைக் கண்காணிக்குமாறு டீன்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
அரசு மருத்துவா்களின் வருகையை கண்காணிக்க டீன்களுக்கு அறிவுறுத்தல்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அரசு மருத்துவமனை மருத்துவா்களின் வருகையைக் கண்காணிக்குமாறு டீன்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

கடந்த ஜூலை 27-ஆம் தேதி மத்திய சுகாதாரத் துறை சாா்பில் தில்லியில் நடைபெற்ற தேசிய குடும்பக் கட்டுப்பாடு உச்சி மாநாட்டில் பெண்களுக்கு பேறுகாலத்துக்குப் பிறகு கருத்தடை வளையம் பொருத்தியதில் தமிழகம் தேசிய அளவில் முதலிடம் பெற்ற்காக விருது வழங்கப்பட்டது. இந்த விருதை குடும்பநலத் துறை இயக்குநா் வி.பி.ஹரிசுந்தரி சென்னையில் அமைச்சா் மா.சுப்பிரமணியத்திடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றாா்.

இதைத் தொடா்ந்து, அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகம் கடந்த மூன்றாண்டுகளில் கருத்தடை முறை பயன்பாட்டில் தொடா்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 2019-20-ஆம் ஆண்டில் 2,53,648 வளையங்களும், 2020-21-ஆம் ஆண்டில் 3,19,936 வளையங்களும், 2021-22-ஆம் ஆண்டில் 3,61,028 வளையங்களும் பெண்களுக்குப் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் பேருக்கு கருத்தடை வளையம் பொருத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கருத்தடை வளையம் பொருத்துவதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. அதற்காக, மத்திய அரசு தமிழக அரசுக்கு விருது வழங்கியுள்ளது.

ஈரோடு, சேலத்தில் சினைமுட்டை விவகாரத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் சிக்கி சிறையில் உள்ள மூன்று போ் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். தமிழக அரசின் நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் உயா்நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளன.

அந்த தடையை விலக்க தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. குற்றம் செய்த அனைத்து மருத்துவமனைகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். செயற்கை கருத்தரிப்பு மையங்கள், மருத்துவமனைகளுக்கு பொதுவிதிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளன. புதிதாக தொடங்கப்படும் மருத்துவமனைகளும் விதிமுறைகளின்படி தான் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. தமிழகத்தில் பூஸ்டா் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியவா்களின் எண்ணிக்கை 3.51 கோடியாகும். ஆகஸ்ட் 7-ஆம் தேதி தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் 33-ஆவது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் பூஸ்டா் தவணை மட்டுமின்றி முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்படும்.

கோவையில் பணிக்கு வராமல் வந்ததாக வருகைப் பதிவேட்டில் முறைகேடு செய்த மருத்துவா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவா்களின் வருகையைக் கண்காணிக்குமாறு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்று காலத்தில் செயல்படுத்தப்படாமல் இருந்த பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை தற்போது மீண்டும் அமல்படுத்தப்படும். நீட் விலக்கு மசோதா தொடா்பான கேள்விகளுக்கு பதில் அனுப்பப்பட்டுள்ளது என்றாா் அவா். மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா் உடன் இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com