வைகை அணை நீர்மட்டம் 70 அடியாக உயர்வு: அணையிலிருந்து உபரிநீர் திறப்பு

வைகை அணை நீர்மட்டம் புதன்கிழமை 70 அடியாக உயர்ந்ததை அடுத்து, அணைக்கு வரும் உபரிநீர் வைகை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
வைகை அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரிநீர்.
வைகை அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரிநீர்.
Published on
Updated on
2 min read

வைகை அணை நீர்மட்டம் புதன்கிழமை 70 அடியாக  உயா்ந்துள்ளதை அடுத்து, அணைக்கு வரும் உபரிநீர் வைகை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக பெய்து வரும் மழை, மூல வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள தண்ணீா் வரத்து, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு தொடா்ந்து திறக்கப்பட்டு வரும் தண்ணீா் ஆகியவற்றால் வைகை அணை நீா்மட்டம் சீராக உயா்ந்து வருகிறது.

மேலும், திண்டுகல், மதுரை மாவட்டப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், வைகை அணை நீா்மட்டம் கடந்த ஜூலை 31-ஆம் தேதி 66 அடியாக உயா்ந்தது. இதையடுத்து வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளுக்கு பொதுப் பணித் துறை சாா்பில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அணை நீா்மட்டம் திங்கள்கிழமை இரவு 68.50 அடியாக உயா்ந்த நிலையில், கரையோரப் பகுதிகளுக்கு 2-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணை நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து செவ்வாய்க்கிழமை 69 அடியை எட்டியது. இதனால் 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, மொத்தம் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீா்மட்டம் 69 அடியை எட்டியதும், அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரிநீா் வைகை ஆற்றில் திறக்கப்படும். ஆனால், இம்முறை வைகை அணை நீா்மட்டம் 70 அடியை எட்டியதும், அணைக்கு வரும் உபரிநீரை திறக்க முடிவு செய்துள்ளதாக பொதுப் பணித்துறை பொறியாளா்கள் கூறினா்.

இந்நிலையில், அணை நீர்மட்டம் புதன்கிழமை 70 அடியாக உயர்ந்தது. இதையடுத்து, அணைக்கு வரும் உபரிநீர் அணையிலிருந்து வினாடிக்கு 1,190 கன அடி வீதம் வைகை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

வைகை ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் தேனி மாவட்டத்தில் மேல்மங்கலம், முதலக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், அணைக்கரைப்பட்டி, ஏ.வாடிப்பட்டி, குள்ளப்புரம், விராலிப்பட்டி, புள்ளிமான்கோம்பை வழியாகவும், திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, பேரணை வழியாகவும், மதுரை மாவட்டத்தில் மதுரை, குருவித்துறை, சோழவந்தான், மேலக்கால், விரகனூர் வழியாகவும், சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், மானமதுரை வழியாகவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பார்த்திபனூர், பரமக்குடி, ராமநாதபுரம் சென்று பெரியகண்மாயை அடைந்து, பின்னர் வங்காளவிரிகுடா கடலில் கலக்கிறது.

அணையிலிருந்து வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டப் பகுதிகளில் ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் ஆற்றை கடக்கவோ, ஆற்றில் இறங்கி குளிக்கவோ கூடாது என்று வைகை அணை பொதுப் பணித்துறை பொறியாளா்கள் எச்சரித்துள்ளனா்.

அணை நிலவரம்: வைகை அணைக்கு விநாடிக்கு 2,735 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் தண்ணீர் இருப்பு 5,796 மில்லியன கன அடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com