
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை அரசே மேற்கொள்ளும் வரைவுக்கு ஒப்புதல் தர மறுத்து ஆளுநர் அடம்பிடிக்கிறாரென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
குஜராத், ஆந்திரம், தெலங்கானாவில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசுகளே நியமிக்கின்றன. இந்த நிலையில், மாநில அரசுகளே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கலாம் என்ற புஞ்சி ஆணையம் பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆணைய பரிந்துரையை ஏற்று, பல்கலைக்கழக துணைவேந்தர்களை இனி மாநில ஆளுநருக்கு பதிலாக ஆளும் அரசே நியமிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு, விவாதங்களுக்குப் பின் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியதாவது:
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை அரசே மேற்கொள்ளும் வரைவுக்கு ஒப்புதல் தர மறுத்து ஆளுநர் அடம்பிடிக்கிறார். அரசை விட அதீத அதிகாரங்கள் இருப்பதாக காட்டிக்கொள்ளும் அடாவடித்தனத்தின் தொடர்ச்சியே இது. குஜராத், தெலுங்கானா மாநிலங்களில் துணைவேந்தர் நியமனத்தை மாநில அரசுகளே மேற்கொள்கின்றன. மாநில பல்கலைக்கழகத்தில் ஜனநாயக விரோத அரசியலை புகுத்துவதே ஆளுநர்தான்.
உயர்கல்வித்துறை அமைச்சரையே ஆலோசிக்காமல் பட்டமளிப்பு விழா நடத்துவது என தனி ராஜ்ஜியம் நடத்த முயன்றார் ஆளுநர். ஆளுநர் தனது நாடகத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.