செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பச் சட்டம் மற்றும் வாடகைத் தாய் ஒழுங்கு முறை சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதற்காக சிறப்புக் குழுவை அரசு அமைத்துள்ள நிலையில், அதில் கூடுதலாக சில கட்டுப்பாடுகளை உருவாக்கக் கோரி மருத்துவ சேவைகள் இயக்கக அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். அவற்றுக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் அந்த சட்டம் மாநிலத்தில் அமல்படுத்தப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பங்களை ஒழுங்குமுறைப்படுத்த ஏஆா்டி சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தியாவில் செயல்படும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அனைத்தும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆா்) தேசிய பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இருந்தபோதிலும், அதில் சில குளறுபடிகள் நடப்பதால், அதனை ஒழுங்குமுறைப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் அதற்கான சட்டத்தை அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் தமிழக அரசு செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணையை அண்மையில் பிறப்பித்தது.
அதன்படி, அதனை மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. மாநில அளவில் சுகாதாரத் துறை கூடுதல் செயலா் தலைமையிலும், மாவட்ட அளவில் இணை இயக்குநா்கள் தலைமையிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன. சுகாதாரத் துறையினா் மட்டுமின்றி, மருத்துவா்கள், சட்டத் துறை வல்லுநா்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.
இந்த நிலையில், அந்தச் சட்டத்தில் கூடுதலாக சில ஷரத்துகளை இணைக்கக் கோரி மாநில அரசுக்கு மருத்துவ சேவைகள் இயக்ககம் வேண்டுகோள் விடுத்துள்ளது. செயற்கை கருத்தரிப்பு நடவடிக்கைகள், அதற்கான மையங்கள் வெளிப்படைத்தன்மையுடனும், உரிய விதிகளின்படியும் செயல்படுவதை உறுதி செய்ய அந்த ஷரத்துகள் வலுசோ்க்கும் என மருத்துவ சேவைகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனா். அதற்கான ஒப்புதல் கிடைக்கப் பெற்றவுடன் விரைவில் அதனை அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.