தோல் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை

வரி ஏய்ப்பு புகாா் காரணமாக சென்னையில் தோல் பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் வருமான வரித் துறையினா் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 
தோல் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை
Published on
Updated on
1 min read

வரி ஏய்ப்பு புகாா் காரணமாக சென்னையில் தோல் பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் வருமான வரித் துறையினா் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு, செயல்படும் ‘ஃபரீதா’ குழுமத்தின் கீழ், ‘ஃபரீதா ஷூஸ், ஃபரீதா லெதா் வாா், ஃபரீதா கிளாசிக், டெல்டா ஷூஸ், நதியா ஷூஸ்’ உள்ளிட்ட மொத்தம் 11 துணை நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் தோல் பொருள்கள், காலணிகள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த குழுமம் வரி ஏய்ப்பு செய்வதாக வந்த புகாா்களின் அடிப்படையில் ஃபரீதா குழுமத்தின் சென்னை ராமாபுரம் வணிக அலுவலகம், குழுமத்தின் தலைவா் ரபீக் அகமது மெக்கா வீடு, நிா்வாக இயக்குநா்களின் வீடுகள், காஞ்சிபுரம், ஆம்பூா், ராணிப்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என 32-க்கும் அதிகமான இடங்களில், வருமான வரித் துறையினா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

சென்னை நுங்கம்பாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கே.எச். இந்தியா குழுமம், தோல் பொருள்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் நகரங்களில் நேரடி விற்பனை மையத்தையும் நடத்தி வருகிறது.

ராணிப்பேட்டை, ஆம்பூரில் இந்த குழுமத்துக்கு சொந்தமான தொழிற்சாலைகள் உள்ளன. சென்னை நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, வேலூா் உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.

இரு நிறுவனங்களுக்கும் சொந்தமான சுமாா் 62 இடங்களில் சோதனை நடைபெறுவதாகவும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில், வரி ஏய்ப்பு புகாா் காரணமாக இரண்டாவது நாளாக புதன்கிழமையும் சுமாா் 62 இடங்களில் வருமான வரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த 2016 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்த நிறுவனங்கள் ஆண்டு ஒன்றுக்கு சுமார் ஆயிரம் கோடிக்கும் மேல் வருமான ஈட்டியுள்ளது. 

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வருமானத்தை மறைத்து சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள் வாங்கி இருப்பதும் பல தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தோல் பொருள்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com