பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை மாலை நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன்சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கிறார்கள்.
குறிப்பாக சென்னையை அடுத்த பரந்தூரில் அமைய உள்ள 2-ஆவது பசுமை விமான நிலைய விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்வது குறித்த அவசர சட்டம் நிறைவேற்றுவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருப்பதையொட்டி, வெள்ளத்தடுப்பு, மழைநீர் வடிகால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து மக்களை பாதுகாப்பது குறித்தும், தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்காக அரசிடம் விண்ணப்பித்துள்ள நிறுவனங்களுக்கு அனுமதி மற்றும் சலுகைகளும் வழங்குவது குறித்தும், உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், மாநில கல்வி கொள்கை, மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்குதல், மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.