
தமிழக அரசும் மதுரை மாவட்ட வருவாய்த்துறையும் தாமதம் காட்டுவதால் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெறவில்லை என ஆர்டிஐ-இல் தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச விமான நிலையம் என்ற அந்தஸ்தைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஆர்டிஐ ஆர்வலர் வேதனைத் தெரிவித்துள்ளார்.
தென்மாவட்டங்களில் விரைவுப் போக்குவரத்துக்கு ஏதுவான மையமாக மதுரை விமான நிலையம் திகழ்ந்து வருகிறது. இங்கிருந்து சென்னை, மும்பை, பெங்களுர், ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட முக்கிய இந்திய நகரங்களுக்கும், இலங்கை, சிங்கப்பூர், துபாய், ஷார்ஜா ஆகிய நாடுகளுக்கும் விமானப் போக்குவரத்து நடைபெறுகிறது.
இந்நிலையில், சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மேலும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் மதகநேரியைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் வரதன் அனந்தப்பன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், இந்திய ஏர்போர்ட் ஆணையத்திடம் தகவல் கேட்டிருந்தார்.
அதில் , மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்கு தேவையான 633.17 ஏக்கர் நிலங்களில் இதுவரை 543.63 ஏக்கர் நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்பட்டு மத்திய விமானப் போக்குவரத்துத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் இதற்கான கட்டுமானப் பணிகள் திட்டமிடுதல் நிலையிலேயே உள்ளதாகவும், மீதமுள்ள 89.54 ஏக்கர் நிலங்களை தமிழக அரசும், மதுரை மாவட்ட நிர்வாகமும் கையகப்படுத்தி விமானப் போக்குவரத்துத் துறையிடம் விரைந்து வழங்கினால் பணிகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
ஆர்டிஐ ஆர்வலர் வரதன் அனந்தப்பன் கூறுகையில், எஞ்சியுள்ள நிலங்களை தமிழக அரசு விரைவாகக் கையகப்படுத்தி மத்திய விமானப்போக்குவரத்துத் துறைக்கு விரைவில் வழங்க வேண்டும். இதன் காரணமாக விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தள்ளிப் போவதால், மதுரை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் திட்டமும் தொடர்ந்து தாமதமாகிறது. ஆகையால் தமிழக அரசும் மதுரை மாவட்ட நிர்வாகமும் இதில் கூடுதல் அக்கறை காட்டுவது அவசியம்’ எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.