பிரபலமாகாத பாரதியார் நினைவு அருங்காட்சியகம்!

புதுச்சேரியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்ட போதிலும், சுற்றுலாப் பயணிகள், இளைய தலைமுறையினர்
பிரபலமாகாத பாரதியார் நினைவு அருங்காட்சியகம்!

புதுச்சேரியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்ட போதிலும், சுற்றுலாப் பயணிகள், இளைய தலைமுறையினர் மத்தியில் பிரபலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பாரதி அன்பர்கள் கோரிக்கை விடுத்தனர்.

புதுச்சேரியில் 1908-ஆம் ஆண்டு முதல் 1918-ஆம் ஆண்டு வரை பாரதியார் தங்கியிருந்தார். இங்குள்ள ஈஸ்வரன் கோயில் தெருவில் அவர் வசித்து வந்தார். புதுச்சேரி கருவடிக்குப்பத்திலுள்ள மாந்தோப்பில் (தற்போது குயில் தோப்பு) அமர்ந்து பல பாடல்களைப் புனைந்துள்ளார். அவர் புதுச்சேரியில் இருந்த போது கண்ணன் பாட்டு, குயில் பாட்டு என பல படைப்புகள் படைக்கப்பட்டன.
புதுச்சேரியில் பாரதியார் வாழ்ந்த வீடு அரசுடைமையாக்கப்பட்டது. சட்டப்பேரவை வளாகம் முன்னுள்ள பூங்காவுக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டு, முழு உருவச் சிலையும் நிறுவப்பட்டது. அவர் வாழ்ந்த வீடு பாரதியார் நினைவு அருங்காட்சியகம்- ஆய்வு மையம் என புதுவை அரசால் பெயரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

பாரதிக்கு பெருமை சேர்த்துள்ள அதே நேரத்தில், பாரதியார் நினைவு அருங்காட்சியகத்துக்கு செல்லும் வழிகுறித்தோ, விடுதலைப் போராட்டத்தில் அவரது பங்கு குறித்த தகவல்களோ இல்லாதது குறையாக உள்ளது.

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அவர் வாழ்ந்த வீட்டுக்கு எளிதில் செல்ல முடியாத நிலை உள்ளதாக பாரதி அன்பர்கள் தெரிவித்தனர். இந்த இல்லம் குறித்து இணையத்தில் மட்டுமே தகவல் பெற முடிகிறது.

பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் அவரது குடும்பப் புகைப்படங்கள் உள்ளிட்ட பல அரிய புகைப்படங்கள், அவரின் படைப்புகள் உள்ளிட்டவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆனால், புதுச்சேரியில் இருந்தபோது பாரதியின் அரிய படைப்புகள், அந்த வீட்டில் அவர் தங்கிய அறை போன்ற விவரங்களை விளக்கும் வகையில் பணியாளர்கள் இல்லை.

பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தை இரு பெண் பணியாளர்கள் நல்ல முறையில் பராமரித்து வருகின்றனர். பெண் அலுவலர் பொறுப்பாளராக உள்ளார். அந்த வீட்டிலுள்ள வட்டக் கிணறு பாதியளவே பாதுகாக்கப்பட்டுள்ளது. அதைப் பார்வையாளர்கள் எளிதில் காண முடியாத அளவில் பூட்டப்பட்டுள்ளது. பாரதி வாழ்ந்த வீட்டின் சிறப்பை இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில், பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

தற்போது, மாதத்துக்கு சுமார் 500 பேர் மட்டுமே இங்கு வந்து பார்வையிட்டுச் செல்வதாகக் கூறப்படுகிறது. புதுவை சுற்றுலாத் துறை மூலம் பாரதியார் நினைவு இல்ல விவரங்கள் நகரின் முக்கிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டால், பார்வையாளர்கள் வருகை அதிகரிக்கும். இந்த வீடு இருக்கும் தெருவின் முனையில் வரவேற்பு வளைவு அமைக்க வேண்டும்.

வாராணசியில் பாரதியார் 4 ஆண்டுகள் வசித்த வீடு, காசி தமிழ்ச் சங்கமம் மூலம் உலகறியச் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பாரதி வாழ்ந்த வீடு குறித்து புதுவை சுற்றுலாத் துறையின் விளம்பரப் பதாகைகளில் குறிப்பிடப்படவில்லை என்று இலக்கியவாதிகள் தெரிவித்தனர்.

மகாகவி பாரதி பிறந்த நாளில் (டிச.11) அவர் வாழ்ந்த வீட்டுக்குச் சென்று மரியாதை செலுத்துவதுடன் விட்டு விடாமல், அவரின் வாழ்க்கை முறை, விடுதலைப் போராட்டத்தில் அவரின் பங்கு குறித்து இளைய தலைமுறையினர் மத்தியில் கொண்டு சேர்ப்பதும்தான் பாரதியாருக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாக அமையும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com