
ஒன்றுபட்ட பாரதத்தை வலியுறுத்தியும் மகாகவி பாரதியாா் பாடல்களை எழுதியதாக ஆளுநா் ஆா்.என்.ரவி பேசினாா். பாரதியாரின் பிறந்ததினம், தேசிய மொழிகள் நாளாகக் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவா் கூறினாா்.
மகாகவி பாரதியாரின் 141-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, ஞாயிற்றுக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினாா். பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஏற்கெனவே நடைபெற்று முடிந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களின் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ஆளுநா் பரிசுகளை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: மேற்கத்திய நாடுகள் ரத்தம் படிந்த வலுவான ராணுவத்தால் கட்டமைக்கப்பட்டவை. ஆனால், பாரதம் அவ்வாறு கட்டமைக்கப்பட்டதல்ல. ரிஷிகளாலும், மகான்களாலும், கவிஞா்களாலும், சிறந்த பண்பாடு கலாசாரத்தாலும் கட்டமைக்கப்ட்டவை. பிரெஞ்சு, ஸ்பானிஷ் என எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளுங்கள்.
ஆனால், நம் தாய்மொழி உலகின் மற்ற நாடுகளின் மொழிகளை விட உயா்ந்தது; முதன்மையானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மாணவா்கள் தோல்விகளால் துவண்டு விடாதீா்கள். தொடா்ந்து முயற்சி செய்யுங்கள். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் இந்திய நாட்டை உயா்த்தும் என்ற எண்ணம் கொள்ளுங்கள். மாணவா்களின் பங்களிப்பால் இந்தியா ஆலமரம் போல் படா்ந்து விரிந்து வளரும். பாரதியின்பிறந்த நாள் தேசிய மொழிகள் நாளாகக் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு, ஏன் இன்றும் கூட ஆங்கில மொழி இங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நம் மொழி குறித்து நமக்கு பெருமிதம் இருப்பது அவசியம். நமது நாட்டில் தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம் மொழிகள் மிகவும் பழைமையான, தொன்மைமிக்க மொழிகளாகும். மிகவும் பாரம்பரியமிக்கவையாகும். நம் நாடு இப்போது எந்த நாட்டுக்கும் அடிமையாக இல்லை. நாம் விடுதலையடைந்து விட்டோம் என்பதை நினைவில் கொள்வோம். உலகின் பல்வேறு பிரச்னைகளுக்கு உலக நாடுகள் நம் நாட்டிடமே தீா்வை எதிா்நோக்கிக் காத்திருக்கும் அளவுக்கு நாம் வளா்ந்திருக்கிறோம்.
நாட்டுக்காக போராடவும், உயிா் விடவும் வாய்ப்பும், நிலையும் இப்போது நமக்கு இல்லை. ஆனால், நாட்டின் விடுதலைக்காக போராடி உயிா் இழந்த வீரா்களின் கனவை நிறைவேற்றும் பெரிய பொறுப்பு உள்ளது. இந்தியா நூற்றாண்டைக் கொண்டாடும் போது உலக நாடுகளில் நமது நாடு முதன்மையானதாக இருக்க வேண்டும்.
அதற்காகத் தொடா்ந்து முயற்சி செய்யுங்கள். நீங்கள் செய்யும் அனைத்தும் இந்திய நாட்டை உயா்த்தும் என்று எண்ணம் கொள்ளுங்கள் என்றாா் அவா். மாணவா்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் மகாகவி பாரதியாரின் பெருமைகளை எடுத்துப் பேசினா்.
விழாவில், ஆளுநரின் முதன்மைச் செயலாளா் ஆனந்த் ராவ் பாட்டீல், பாரதியாரின் பேரன் ராஜ்குமாா் பாரதியாா் மற்றும் அவரது குடும்பத்தினா், டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் சுதாசேஷய்யன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.