பாலாற்றில் வெள்ளம்! பொதுமக்கள் வெளியேற ஆட்சியர் எச்சரிக்கை

30 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை, உடனடியாக வெளியேற காஞ்சிபுரம் ஆட்சியர் வேண்டுகோள்.
பாலாற்றில் வெள்ளம்! பொதுமக்கள் வெளியேற ஆட்சியர் எச்சரிக்கை
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம்: பாலாறு அணைக்கட்டிலிருந்து வினாடிக்கு 1,724 கன அடி உபரிநீர் பாலாற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் உள்ள 30 கிராம மக்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பாக இருக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

'மாண்டஸ்' புயல் மற்றும் தொடர்மழை காரணமாக பாலாறு ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாறு அணைக்கட்டிலிருந்து திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வினாடிக்கு 1,724 கன அடி உபரிநீர் பாலாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், தொடர்மழையின் காரணமாக கூடுதலாக பாலாற்றில் தண்ணீர் வரவும் வாய்ப்பிருக்கிறது எனவும் பொதுப்பணித்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் இடதுகரை பகுதிகளில் அமைந்துள்ள பெரும்பாக்கம், முத்தவேடு, விஷார், பிச்சவாடி, விப்பேடு, வெங்கடாபுரம், ஆளவந்தார்மேடு, செவிலிமேடு, ஓரிக்கை, சின்ன கயப்பாக்கம், வெங்குடி, வில்லிவாக்கம், கோயம் பாக்கம், வாலாஜாபாத், பழைய சீவரம் மற்றும் வலதுகரைப் பகுதிகளில் அமைந்துள்ள குருவிமலை, வனத்தோட்டம், அசூர், அவலூர், கோழிவாக்கம், புஞ்சை அரசன்தாங்கல், விச்சந்தாங்கல், திருமுக்கூடல், பினாயூர், சாத்தனஞ்சேரி, காவித்தண்டலம், ஒரக்காட்டுப்பேட்டை உள்ளிட்ட 30 கிராமங்களை சேர்ந்த கரையோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்படுகிறது.

பாலாற்றின் கரையோரங்கள் முழுவதும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ, துணி துவைக்கவோ இரங்க வேண்டாம். செல்போன் மூலம் புகைப்படம் எடுப்பது, செல்பி எடுப்பது போன்றவற்றை செய்யக்கூடாது.

கால்நடைகளை மேய்ச்சலுக்காக பாலாற்றுப் பகுதிக்கு அனுப்ப வேண்டாம். வீட்டில் இருக்கும் சிறுவர், சிறுமியர்களையும் ஆற்றின் அருகில் செல்லாமல் பாதுகாப்பதோடு விழிப்புடன் இருக்குமாறும் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com