பெண்களை சக்கரவர்த்தினியாக பெருமைப்படுத்தியவர் பாரதி!

பெண்களை சக்கரவர்த்தினியாக பெருமைப்படுத்தியவர் பாரதி என்று புகழாரம் சூட்டினார் தெலங்கானா-புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன். 
பெண்களை சக்கரவர்த்தினியாக பெருமைப்படுத்தியவர் பாரதி!
Published on
Updated on
2 min read

பெண்களை சக்கரவர்த்தினியாக பெருமைப்படுத்தியவர் பாரதி என்று புகழாரம் சூட்டினார் தெலங்கானா-புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன். 

தினமணி சார்பில் "மகாகவி பாரதியார்' விருது வழங்கும் விழா தூத்துக்குடி காமராஜர் கல்லூரி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில், தெலங்கானா-புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாரதி ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு மகாகவி பாரதியார் விருது, ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கிப் பேசியது:

மகாகவி பாரதியார் பெயரில் விருது வழங்கும் தினமணிக்கு முதலில் எனது பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறேன். விருது பெற்றுள்ள ஆ.இரா. வேங்கடாசலபதியின் பாரதி குறித்த ஆய்வுகள் மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றன.  

பாரதி எந்தவொரு விஷயத்திலும் பெரிய கனவுடன் திகழ்ந்தவர். அதுவும், பெண்கள் குறித்த அவரது சிந்தனைகள் மிகவும் மேம்பட்டவை. பெண்களை சக்கரவர்த்தினி எனக் குறிப்பிட்டுப் பெருமைப்படுத்தினார். சக்கரவர்த்தினி என்கிற பெயரில் பெண்களுக்காக பத்திரிகையே நடத்தினார். பெண்களை உயரிய எண்ணத்தோடு பார்த்ததுடன், நிமிர்ந்த நன்னடையே பெண்களின் நடை என்று சுட்டிக்காட்டினார். மிகக்குறுகிய காலமே வாழ்ந்தாலும் தமிழுக்கு மிகப்பெரும் பெருமையைச் சேர்த்தவர் பாரதி.

பாரதியைப் படிக்கப் படிக்க பெண்கள் அச்சமின்றி எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெற முடியும். எனது தந்தை மூலம் 4 வயதுமுதலே "அச்சமில்லை அச்சமில்லை' என்ற பாரதியின் வரிகளை மனதில் ஏற்றிக்கொண்டு செயல்பட்டதால்தான் இந்த நிலையை அடைந்துள்ளேன். 

பாரதியார் காசிக்குச் சென்றபோது அங்கிருந்த காசி சர்வ கலாசாலை நூலகத்தைப் பயன்படுத்தி தனது அறிவைப் பெருக்கிக்கொண்டார். அவர் சிறந்தவராக வருவார் என்று அன்னிபெசன்ட் அம்மையார் ஆரம்பத்திலேயே கணித்துச் சொல்லியிருந்தார். தமிழின் பெருமையை எடுத்துச்சொல்லும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். அங்கு, மகாகவி பாரதியின் படைப்புகளே அதிகம் பேசப்படுகின்றன.

மகாகவி பாரதியின் புகழை புதுச்சேரியில் எடுத்துரைக்கும் வகையில் அவருக்கு வானுயர சிலை அமைக்க புதுவை முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தினமணியின் நாட்டுப்பற்றையும், நாட்டின் விடுதலைக்காக அந்த நாளிதழ் அளித்த பங்களிப்பையும் யாரும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இத்தகைய சிறப்பைப் பெற்ற தினமணி, மகாகவி பாரதியார் விருதை ஆண்டுதோறும் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பது எனது விருப்பம் என்றார் தமிழிசை செüந்தரராஜன்.

விழாவில், தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் வரவேற்புரையாற்றினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன் விருதாளரை அறிமுகப்படுத்தினார். ஆ.இரா.வேங்கடாசலபதி ஏற்புரையாற்றினார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும முதுநிலை துணைத் தலைவர் (விளம்பரப் பிரிவு) ஜெ. விக்னேஷ்குமார் நன்றி கூறினார்.முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் தமிழக பாஜக துணைத் தலைவருமான சசிகலா புஷ்பா, சென்னை பாவேந்தர் பாரதிதாசனார் -பாரதியார் பண்பாட்டு கலை இலக்கியக் கழக நிறுவனர் தலைவரும் பாஜக முன்னாள் ஊடகப் பிரிவு மாநிலத் தலைவருமான சுப்பிரமணிய பிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலர் சிரஞ்சீவி, கவிஞர் ஜெயபாஸ்கரன், ஓவியர் பொன்.வள்ளிநாயகம், பாரதி அன்பர் செந்தில் பிரசாத், வையை இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கருணாகரசேதுபதி, சிவக்குமார், பியர்ஸ் ஷிப்பிங் நிறுவனத் தலைவர் எட்வின் சாமுவேல், காமராஜர் கல்லூரிச் செயலர் சோமு, கல்லூரி முதல்வர் ஜே. பூங்கொடி,  தொழிலதிபர் செண்பகமாறபாண்டியன்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
நிகழ்ச்சிகளை கோதை ஜோதிலட்சுமி தொகுத்து வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com